Published : 02 Jan 2020 06:29 PM
Last Updated : 02 Jan 2020 06:29 PM

நெல்லை கண்ணன் கைது; பாஜக தலைவர்களுக்கு ஒரு நியாயம்? மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? -கே. பாலகிருஷ்ணன் கண்டனம்

ஜனநாயக அடிப்படையில் கருத்து தெரிவிப்பவர்களைக் கைது செய்யும் காவல்துறை, பாஜகவினரின் அராஜகப் போக்குகள் மீது கிஞ்சிற்றும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதையெல்லாம் பார்த்தால் தமிழகத்தில் நடைபெறுவது அதிமுக அரசா? பாஜக அரசா? என கேள்வி எழுகிறது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சிறந்த பேச்சாளரும், சிந்தனையாளருமான நெல்லை கண்ணன் தரக்குறைவாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பிணையில் வெளிவரமுடியாத வகையில் தமிழக காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

ஆனால், பாஜக தலைவர்களான ஹெச். ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் வன்முறையைத் தூண்டும் வகையிலும், தந்தை பெரியார் குறித்தும், நீதிபதிகள், காவல்துறையினர் மற்றும் மாற்றுக் கட்சித் தலைவர்களையும், பெண்களையும் அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.

இதுகுறித்து பல அமைப்புகள் போராட்டங்கள் நடத்திய பின்னரும் பாஜக தலைவர்கள் மீது தமிழக காவல்துறையினர் குறைந்தபட்ச நடவடிக்கை கூட எடுக்கவில்லை. பாஜக தலைவர்களுக்கு ஒரு நியாயம், நெல்லை கண்ணணுக்கு இன்னொரு நியாயம் என்ற வகையில் பாரபட்சமான முறையில் செயல்படும் காவல்துறையினரின் போக்கு கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம், மாலை நேர இயக்கங்கள் உள்ளிட்ட எந்த இயக்கத்தையும் நடத்துவதற்கு காவல்துறை அனுமதிப்பதில்லை. கோலம் போடும் பெண்கள் உட்பட கைது செய்யப்படும் மோசமான நிலை உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு மேல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜனநாயக அடிப்படையில் கருத்து தெரிவிப்பவர்களைக் கைது செய்யும் காவல்துறை பாஜகவினரின் அராஜகப் போக்குகள் மீது கிஞ்சிற்றும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதையெல்லாம் பார்த்தால் தமிழகத்தில் நடைபெறுவது அதிமுக அரசா? பாஜக அரசா? என்ற கேள்வி எழுகிறது.

தமிழக காவல்துறை மற்றும் எடப்பாடி பழனிசாமி அரசின் பாரபட்ச அணுகுமுறைக்கு வன்மையான கண்டனங்கள்”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x