Published : 02 Jan 2020 04:11 PM
Last Updated : 02 Jan 2020 04:11 PM

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு; நீதிமன்றத்தை நாட உள்ளோம்: தேர்தல் ஆணையரைச் சந்தித்த பின் ஸ்டாலின் பேட்டி

திமுக வெற்றியைத் தடுப்பதற்காக வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் செய்வதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுகின்றோம் என தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்த பின் ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

இரண்டு கட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில் திமுக, அதிமுக போட்டாபோட்டியுடன் வெற்றி பெற்று வருகிறது. இதுகுறித்து தங்கள் தரப்பு நியாயத்தை சொல்ல தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமியை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டி:

“எண்ணி முடிக்கப்பட்டு அறிவிக்கக்கூடிய தேர்தல் முடிவுகளைக் கூட இதுவரை அறிவிக்காமல் உள்ளனர் என்பதை அந்தப் பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் எங்களுக்குத் தொடர்ந்து புகார்களாகத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, சேலம் மாவட்டம் குளத்தூர் பகுதியில் 800 வாக்குகள் வித்தியாசத்தில் எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், அதிகாரிகள் அறிவிக்கவில்லை. ஆனால், அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை மட்டும் அறிவித்துவிட்டு அதிகாரிகள் கிளம்பிச் சென்றுள்ளனர்.

அதேபோன்று கெங்கநாதபுரம், எடப்பாடி, சங்ககிரி போன்ற பகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளதாகவும், முன்னணியில் உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. ஆனால் அறிவிக்கவில்லை. முதல்வரின் மைத்துனர் வெங்கடேசன், வாக்கு எண்ணும் மையத்தில் இருக்கிறார். அவருடைய வழிகாட்டுதலின்படி அதிகாரிகள் செயல்படுவதாகத் தெரிகிறது.

திண்டுக்கல், வத்தலகுண்டு ஒன்றிய திமுக வேட்பாளர் வென்றுள்ளார். மீஞ்சூர் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். துணை முதல்வரின் போடி ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் முன்னணியில் உள்ளார். அதையும் அறிவிக்கவில்லை.

தூத்துக்குடி பூதலூர் ஒன்றியத்தில் திமுக ஏஜெண்டுகளை அடித்துத் துரத்திவிட்டு அதிமுக வேட்பாளர்களை வைத்து வாக்கு எண்ணிக்கை நடக்கும் சூழல் உள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் திமுக முன்னணியில் வருவதை எப்படியாவது தடுத்து நிறுத்த முயல்கின்றனர். இதுகுறித்து கட்சியின் வழக்கறிஞர்கள் போனில், ஃபேக்ஸ் மூலமாக புகார் அளித்துள்ளனர். எந்தவித பதிலும் இல்லை.

அதனால்தான் நானே நேரடியாக வந்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இன்னும் அரை மணிநேரத்தில் நல்லது நடக்கும் என நினைக்கின்றனர். இதை இத்துடன் விடப் போவதில்லை. நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவெடுத்துள்ளோம்.

இதை இத்துடன் விடுவதா? அல்லது தேர்தல் ஆணையம் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதா? அல்லது மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவதா என்று யோசிக்கிறோம். வெற்றியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். அதனால்தான் நீதிமன்றம் செல்ல உள்ளோம். வாக்கு எண்ணிக்கையில் தவறு செய்கின்றனர்.

அவர்கள் திருடுகிறார்கள் எனத் தெரிகிறது. திருடிய பின்னர் திருடன் திருடன் என்று சொல்வதை விட திருடும் முன் நடவடிக்கை எடுப்பதே நல்லது என்பதால் நீதிமன்றத்தை நாடுகிறோம்”.

இவ்வாறு ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x