Published : 02 Jan 2020 03:44 PM
Last Updated : 02 Jan 2020 03:44 PM

நெரிக்கப்படும் ஜனநாயகக் குரல்வளை; எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: தமிழக அரசுக்கு முத்தரசன் எச்சரிக்கை

எதேச்சதிகாரமாக தமிழக அரசு தொடர்ந்து செயல்படுமேயானால், அதற்குரிய எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இரா.முத்தரசன் இன்று (ஜன.2) வெளியிட்ட அறிக்கையில், "இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அரசு பறித்து, ஜனநாயகக் குரல்வளையை நெரிக்க முற்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும். அரசியல் அமைப்புச் சட்டத்தை தமிழக அரசு திட்டமிட்டே மீறி செயல்படுகின்றது.

அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக, மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகளைச் செயல்படுத்திட முனைகின்றது. ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு எதிராகவும், போட்டியாகவும் அரசின் கொள்கைகளை ஆதரித்து பேரணி, பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவது அனுமதிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் அரசின் கொள்கைகளை எதிர்க்கும் இயக்கங்களுக்கு அனுமதி மறுத்து வழக்குகள் போடப்படுகின்றன. கடந்த டிசம்பர் 23-ல் திமுக தலைமையில் நடைபெற்ற பேரணி மிகக் கட்டுப்பாடான பேரணி என நாளேடுகள் பாராட்டி தலையங்கம் தீட்டியுள்ளன. ஆனால், கலந்து கொண்ட தலைவர்கள் மற்றும் 10 ஆயிரம் பேர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில், ஜனநாயக நெறி முறைகளுக்கு உட்பட்டு பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 60 ஆயிரம் பேர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன.

வைரமுத்துவுக்கு தனியார் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முன்வந்ததை, பாஜகவினர் பல்கலைக்கழக நிர்வாகத்தை பகிரங்கமாக மிரட்டி பட்டம் வழங்குவதை தடுத்து நிறுத்தி உள்ளனர். தமிழ்நாட்டின் மதிப்புமிக்க கவிஞரை அவமானப்படுத்துவதாக நினைத்து, தங்களின் அரசியல் தரத்தை பாஜகவினர் அம்பலப்படுத்தியுள்ளனர். வைரமுத்துவை வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழவிட மாட்டோம் என பகிரங்கமாக அச்சுறுத்துகின்றனர். இதை மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது.

நெல்லை கண்ணன் வீட்டுக்கு முன் மறியல் செய்கின்றனர். மருத்துவமனை முன்பும், மறியல் செய்கின்றனர். காவல்துறை கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்தது மட்டுமின்றி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கள் வீட்டு முற்றத்தில் கோலமிட்ட பெண்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய அடக்குமுறை நிகழ்வுகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு, அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் உரிய மதிப்பளிக்காமல், மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களின் மனம் கோணாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எதனையும் செய்யலாம் என எதேச்சதிகாரமாக தமிழக அரசு தொடர்ந்து செயல்படுமேயானால், அதற்குரிய எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு எச்சரிக்கை செய்கின்றது" என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x