Published : 22 Aug 2015 08:11 AM
Last Updated : 22 Aug 2015 08:11 AM

பெண் உதவியாளர் கொடுத்த புகார்: ஈவிகேஎஸ் இளங்கோவன் கைதுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு - முன்ஜாமீன் மனு மீதான விசாரணை 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பெண் உதவியாளர் கொடுத்த புகாரில் ஈவிகேஎஸ் இளங்கோவனை கைது செய்ய போலீசாருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், முன்ஜாமீன் கோரி இளங்கோவன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமைக்கு (24-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் வளர்மதி என்ற பெண் ஒரு புகார் மனு கொடுத்தார். மனுவில், “தமிழக காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு சொந்தமான காமராஜர் அரங்கத்தின் நிர்வாக அலுவலகத்தில் கடந்த 24 ஆண்டுகளாக வேலை செய்து வந்தேன். காமராஜர் அரங்கம் நிர்வாகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து கேட்டபோது, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், காமராஜர் அரங்கத் தின் மேலாளர் நாராயணன் ஆகியோர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்” என்று கூறியிருந்தார்.

இப்புகார் மீது நடவடிக்கை எடுக்க தேனாம்பேட்டை போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பரிந்துரை செய்தார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேற்று காலையில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் தொடர்பான மனுக்களை விசாரிக்கத் தொடங்கினார்.

அப்போது மூத்த வழக்கறிஞர் வி.பிரகாஷ் ஆஜராகி, “தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் மீது பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே, இளங்கோவனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளோம். அந்த மனுவை அவசர வழக்காக உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினார். ஆனால் இக்கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்பு வழக்கறிஞர் வி.பிரகாஷ் ஆஜராகி, “இளங்கோவன் மீது தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே, முன்ஜாமீன் கேட்டு நாங்கள் தாக்கல் செய்யும் மனுவை உடனடியாக விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார். அதனால், முன்ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறினார். அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றனர்.

இதனிடையே இளங்கோவன், மேலாளர் நாராயணன் ஆகியோருக்கு முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், “புகார்தாரர் வளர்மதி காமராஜர் அரங்கத்தில் டெலிபோன் ஆபரேட்டராக பணிபுரிந்தார். அவர் கடந்த மே மாதம் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து, தொழிலாளர் நீதிமன்றத்தில், பணி வழங்கக்கோரி அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், அரசியல் பழி வாங்கும் நோக்கில் இளங்கோவன் மற்றும் மேலாளர் நாராயணன் ஆகியோர் மீது புகார் செய்துள்ளார். அதில், சம்பவம் எப்போது நடந்தது என்பன உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இல்லை. எனவே, இளங்கோவன், நாராயணன் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இம்மனு நீதிபதி எஸ்.வைத்திய நாதன் முன்பு நேற்று மாலை அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆர்.சி.பால்கனகராஜ், ஆர்.சுதா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சண்முகவேலாயுதம், “இம்மனுவுக்கு போலீஸ் தரப்பு கருத்தைக் கேட்க வேண்டும். எனவே மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்” என்றார்.

இதை ஏற்று மனு மீதான விசாரணையை திங்கள்கிழமைக்கு நீதிபதி தள்ளி வைத்தார். அப்போது, மனுதாரர்களின் வழக்கறிஞர்கள், “திங்கள்கிழமை வரை இளங்கோவன், நாராயணன் ஆகியோரை போலீசார் கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அதை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x