Published : 02 Jan 2020 01:03 PM
Last Updated : 02 Jan 2020 01:03 PM

குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக: இரா.முத்தரசன்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்திடக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜன.2) வெளியிட்ட அறிக்கையில், "குடியுரிமைச் சட்டத்தைத் திருத்தி மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக் கொள்கைக்கும் முற்றிலும் எதிரானது.

இதன் விளைவாக நாடு முழுவதும் உணர்ச்சிமிக்க தன்னியல்பான போராட்டங்கள் அன்றாடம் நடைபெற்று வருகின்றன. பேரணி, ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கட்சி, சாதி, மத, பாலின வேறுபாடுகள் இன்றி மிகுந்த எழுச்சியோடு பங்கேற்று வருகின்றனர். மக்களின் எதிர்ப்புணர்வுகளுக்கு மதிப்பளித்திட வேண்டியது மத்திய அரசின் ஜனநாயகக் கடமையாகும். மாறாக கடும் அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொண்டு போராட்டத்தை ஒடுக்க முயன்று வருகின்றது.

இதுவரை பொதுமக்களில் 21 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி உள்ளனர் என்பது மிகுந்த கவலைக்குரியது. கண்ணீர் புகை வீச்சு, தடியடி, கைது, வழக்கு, துப்பாக்கிச் சூடு என தனது கொடிய அடக்குமுறை மூலமாக, தான் நினைத்ததை நிறைவேற்றிட அரசு முயன்று வருகிறது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும். மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் ஒருபோதும் வென்றதாக சரித்திரம் இல்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

இத்தகைய நிலையில், நாட்டுக்கே நல்லதொரு முன்னுதாரணமாக கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்று ஜனநாயக முறையில் முதல்வர் பினராயி விஜயன் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என முன்மொழிந்து, அதன் மீது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதித்து, முதல்வரின் விளக்கத்தை ஏற்று, பாஜக உறுப்பினர் ஒருவர் நீங்கலாக மற்ற அனைத்து உறுப்பினர்களும் ஆதரித்துள்ளனர்.

இந்திய மக்கள் மீது மத்திய அரசு திணித்துள்ள அரசியல் சாசன விரோத குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அரசியல் சாசன அடிப்படைகளுக்கு எதிரான சட்டத்தை நிராகரிக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமையாகும்.

நாட்டுக்கே நல்லதொரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள கேரள அரசை வரவேற்றுப் பாராட்டுகின்றோம். கேரளாவை தமிழகம் பின்பற்ற வேண்டுமென கோருகின்றோம்.

இம்மாதம் 6-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் இவ்வாண்டின் முதல் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இக்கூட்டத்தொடரில், நாட்டின் நலன் கருதி, மக்கள் ஒற்றுமைக்கு, முன்னுரிமை அளித்து, மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவதை தமிழகம் ஒருபோதும் ஏற்காது என்கின்ற நல்ல செய்தியை நாட்டுக்கே எடுத்துக்காட்ட வேண்டும்.

பெரியார், அண்ணா, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழிநின்று ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து, பிரதான எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வழிமொழிந்து எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திடல் வேண்டும்" என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x