

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி அமைதியாக நடந்து வருகிறது. திமுக கூடுதல் இடங்களையும் , அதற்கு இணையாக 2-வது இடத்தில் அதிமுகவும் வெற்றி பெறும் சூழல் தற்போது உள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் 1996-க்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக முறையாக நடந்து வந்தது. ஆனால் 2016-ம் ஆண்டு பல்வேறு காரணங்களைக்கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக நீதிமன்றம் சென்றது.
தொகுதி, வார்டு வரையறை, இட ஒதுக்கீடு முறையாக இல்லை என நடந்த வழக்கில் இறுதியாக உச்ச நீதிமன்றக் கெடுவை அடுத்து தேர்தல் நடத்தும் அறிவிப்பாணை டிசம்பர் மாதம் வெளியானது. ஆனால் மாநகராட்சி நகராட்சிகளுக்கு தேர்தல் இல்லை, ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் திமுக தொடர்ந்த வழக்கில் புதிதாகப் பிரிக்கப்பட்ட, மாநகராட்சி அடங்கியுள்ள 9 மாவட்டங்கள் தவிர, மாநகராட்சிகள், நகராட்சிகள் தவிர ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது.
வாக்குச்சீட்டு அடிப்படையில் இந்தத் தேர்தல் நடந்தது. அதுவும் 4 வாக்குச்சீட்டுகள் தேர்தலில் பயன்படுத்தப்பட்டன. இதனால் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குச்சீட்டுகளைப் பிரித்து, அடுக்கி, அதைப் பிரித்து எண்ணி, முடிவை அறிவிக்க வேண்டும். ஆகவே வாக்கு எண்ணிக்கை முடிய, முழுமையாக முடிவு வர நள்ளிரவு அல்லது நாளை காலை வரை ஆகலாம்.
தற்போது 5,090 ஒன்றிய கவுன்சிலர் 515 மாவட்ட கவுன்சிலருக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் கட்சி வாரியாக போட்டி விவரம் வருமாறு.
ஒன்றிய / மாவட்ட கவுன்சிலர்கள் போட்டி எண்ணிக்கை கட்சி வாரியாக
1.அதிமுக 3842/ 435
2. திமுக 4155/ 420
3.பாஜக 535/ 81
4.காங்கிரஸ் 421/ 74
5.பாமக 432 /36
6.சிபிஎம் 257 / 22
7.சிபிஐ 125/ 23
8. விசிக 106/ 24
9.தேமுதிக 434/ 29
10. நாம் தமிழர் கட்சி 1995/ 364
11.அமமுக 4710/ 498
12.தமாகா 47/ 6
13. மதிமுக 92/ 10