

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காலை 10.30 மணி வரை வாக்கு எண்ணிக்கை தொடங்காததால் தேர்தல் பணியில் இருந்த அலுவலர்களுடன் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 20 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கும் 217 வார்டு உறுப்பினர் பதவிக்கும் கடந்த 27-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதில் 3 தலைவர்கள் மற்றும் 1 ஒன்றிய கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். மீதி இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், இன்று காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. இதில் முறையான உறுதி மொழி பத்திரம் வைத்து ஓட்டுபோடாததால் எண்ணிக்கையின்போது குளறுபடி ஏற்பட்டு வருகிறது.
இதனால், முதல் சுற்றில் எண்ணக்கூடிய 1 முதல் 7 வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மற்றும் 1 மாவட்ட கவுன்சிலர், பச்சமலையான்கோட்டை, கோட்டூர், நூத்துலாபுரம், நரியூத்து, கோடாங்கிநாயக்கன்பட்டி, ஜம்புதுரைக்கோட்டை ஆகிய தலைவர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது 10.30 மணி வரை தொடங்கவில்லை.
வாக்கு எண்ணிக்கை காலதாமதத்தால் தேர்தல் பணியில் இருந்த அலுவலர்களுடன் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.