

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் மேல திருச்செந்தூர் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பேச்சியம்மாள் என்பவர் நேற்றிரவு திடீரென மாரடைப்பால் காலமானார்.
திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறு சந்தியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன். இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 75). ஓய்வு பெற்ற தபால்துறை அதிகாரியான பேச்சியம்மாள் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்து வந்தார். ஏற்கெனவே இவர் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மேல திருச்செந்தூர் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவருக்கு விமான சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த 27-ந் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் வேட்பாளர் மரணமடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2,401 ஊரக உள்ளாட்சிப் பதவிகளை கைப்பற்றப் போவது யார் என்பது இன்று (ஜன.2) மாலை முதல் தெரியவரும். 12 மையங்களில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 3,537 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 1,129 பதவிகளுக்கான பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளனர். 7 பதவிகளுக்கு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் தேர்தல் நடைபெறவில்லை. இந்த 1,136 பதவிகளைத் தவிர 2,401 பதவிகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய நாட்களில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஒரு மையம் என மொத்தம் 12 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 வாக்குச்சாவடிகளுக்கும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் உள்ளிட்ட 1,300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தம் 861 மேஜைகள் போடப்பட்டு, வாக்கு எண்ணும் பணியில் 2,875 பேர் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி வருகிறது.