Last Updated : 02 Jan, 2020 09:22 AM

 

Published : 02 Jan 2020 09:22 AM
Last Updated : 02 Jan 2020 09:22 AM

உள்ளாட்சித் தேர்தல்: அருப்புக்கோட்டையில் சாவி தொலைந்தது; சுத்தியலால் தபால் வாக்குப் பெட்டி உடைப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தபால் வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்ததால் அதிகாரிகள் பூட்டை உடைத்து வாக்குகளை எண்ணினர்.

நடந்து முடிந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (2ம் தேதி) காலை 8 மணிக்குத் தொடங்கியது. முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்கவும், வெளியிடவும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முதல் கட்ட தேர்தலில் 73.65%..

விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டமாக கடந்த 27ம் தேதி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, சிவகாசி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 5 ஊராட்சி ஒன்றியங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என 1,861 பதவிகளுக்கு 5,228 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 1,028 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. முதல் கட்ட தேர்தலில் 73.65% வாக்குகள் பதிவாகி இருந்தன.

2-ம் கட்ட தேர்தலில் 77.05% வாக்குகள்..

அதைத்தொடர்ந்து, 2ம் கட்டமாக கடந்த 30ம் தேதி விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்தூர், திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், 10 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 97 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 242 ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும், 1,155 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 1,504 பதவிகளுக்களுக்கு 4,397 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் 154 வாக்குச் சாவடிகளும், விருதுநகர் ஒன்றியத்தில் 288 வாக்குச் சாவடிகளும், காரியாபட்டி ஒன்றியத்தில் 149 வாக்குச் சாவடிகளும், திருச்சுழி ஒன்றியத்தில் 162 வாக்குச் சாவடிகளும், நரிக்குடி ஒன்றியத்தில் 177 வாக்குச் சாவடிகளும், சாத்தூர் ஒன்றியத்தில் 184 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 1,114 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 2-ம் கட்ட தேர்தலில் 77.05% வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள் பணி ஒதுக்கீட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. ராமநாதபுரம் கமுதி ஒன்றியத்தில் வாக்குச்சீட்டுகளை பிரித்தெடுக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றிய வாக்குகள் எண்ணும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. அதிகாரிகள் எந்தெந்த அறைகளுக்குச் செல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட எஸ்.பி.கே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தபால் ஓட்டுகள் உள்ள பெட்டியில் பூட்டு சாவி தொலைந்து விட்டது காலையில் தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் சுத்தியலால் பூட்டை உடைத்து பெட்டியை திறந்து தபால் வாக்குகளை அளித்தனர். வாக்குப் பெட்டியின் பூட்டை சுத்தியலால் அடித்து உடைத்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x