

2020 புத்தாண்டைக் கொண்டாட கொடைக்கானலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்ததால், சுற்றுலாத் தலங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் டிசம்பர், ஜனவரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகவே இருக்கும்.நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, தனியார் ஓட்டல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்க நேற்று முன்தினம்மாலையில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்தனர்.
நள்ளிரவில் குளிரையும் பொருட்படுத்தாது புத்தாண்டை கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடினர். சுற்றுலாப் பயணிகள்வருகை அதிகரிப்பால், நகரில்உள்ள அனைத்து விடுதிகளும்நிரம்பின. நேற்று காலை முதலேசுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வந்தன.
சுற்றுலாத் தலங்களான பிரையண்ட் பூங்கா, தூண் பாறை, குணா குகை, மோயர் பாயிண்ட்உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனர். ஏரியில் படகு சவாரி செய்தும் புத்தாண்டைக் கொண்டாடினர்.
கொடைக்கானலில் தற்போது பகலில் 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், இரவில் குறைந்தபட்சமாக 9 டிகிரி செல்சியஸும் நிலவுகிறது. காற்றில் ஈரப்பதம் 85 சதவீதமாக இருப்பதால் இரவில் கடும் குளிர் நிலவுகிறது. குளிரை தாக்குப் பிடிக்க முடியாமல் பலரும் ஒருநாள் சுற்றுப் பயணமாக கொடைக்கானலில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு நேற்று இரவே சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.