

க.சக்திவேல்
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்தப் பதவிகளுக்கு சம்பளம் ஏதும் இல்லை என்பது பலருக்கு தெரியாது.
பிறகு ஏன் இத்தனை போட்டி என்ற கேள்வி எழலாம். ஊராட்சிகளுக்கு கிடைக்கும் நிதியும், செயல்படுத்தப்படும் திட்டங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதும், தலைவருக்கான அதிகாரமும் முக்கிய காரணம் என்கிறார் 10 ரூபாய் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான நல்வினை விஸ்வராஜூ.
இதுகுறித்து அவர் கூறும்போது,“ஊராட்சி தலைவருக்கு மதிப்பூதிய மாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள ரூ.200 அமர்வு படியாக வழங்கப்படுகிறது. இரண்டையும் சேர்த்து ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ரூ.1,400 மட்டுமே ஊராட்சி தலைவருக்கு பணமாக வழங்கப்படுகிறது. ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு ஒரு கூட்டத்துக்கு அமர்வு படியாக ரூ.50 வழங்கப்படுகிறது. மாதந்தோறும் அதிகபட்சம் அவர்கள் ரூ.100 பெறலாம்.
காசோலை அதிகாரம்
கிராம ஊராட்சியை பொருத்தவரை காசோலை மூலம் ஊராட்சியின் பணத்தை எடுத்து செலவு செய்யும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு மட்டுமே இருக்கிறது. குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 நாட்கள் கட்டாயமாக கிராம சபைக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.
அந்தக் கூட்டத்தில் முந்தைய 3 மாதங்களில் நடைபெற்ற வரவு-செலவு கணக்கை முன்வைக்க வேண்டும். மக்கள் கேட்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு ஊராட்சி தலைவர் பதிலளிக்க வேண்டும். அப்போது, பல்வேறு திட்டங்களின் பயனாளிகளின் பட்டியலையும் தெரிவிக்க வேண்டும். பயனாளிகளை தேர்வு செய்ய கிராம சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும்” என்றார்.
ஊராட்சிகளின் நிதி ஆதாரம்
கிராம ஊராட்சி நேரடியாக வசூலிக்கும் வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி, விளம்பர வரி, நூலக வரி மூலம் வருவாய் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், குடிநீர் கட்டணம், தொழில் உரிமக் கட்டணம், கட்டிடம் அல்லது மனைப்பிரிவு உரிமக் கட்டணம், கட்டிடக் குத்தகை, சந்தைக் குத்தகை, ஒப்பந்தப்புள்ளி பதிவுக் கட்டணம், வைப்புத் தொகைகள் ஆகியவற்றின் மூலமும் வருவாய் கிடைக்கிறது. இந்த சொந்த வருவாயில் செய்யப்படும் அனைத்து செலவுகளுக்கும் கிராமசபையின் ஒப்புதல் அவசியம்.
மொத்தம் ரூ.7,899 கோடி
இதுகுறித்து தன்னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.நந்தகுமார் கூறியதாவது, ‘‘மேலும், மத்திய நிதி ஆணையநிதி, மாநில நிதி ஆணைய நிதி, மத்திய அரசின் திட்ட நிதி, மாநில அரசின் திட்ட நிதியும் கிடைக்கிறது. மத்திய நிதி ஆணையத்தின் 14-வது நிதி ஆணைய பரிந்துரைகளின்படி, தமிழக கிராம ஊராட்சிகளுக்கு 2015-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை மொத்தம் ரூ.7,899 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், அதிகபட்சமாக 2019-20-ம்ஆண்டில் மட்டும் ரூ.2,369 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு 10 சதவீத நிதியைத் தனது நிகர வருவாயில் இருந்து ஒவ்வொரு நிதி ஆண்டிலும் ஒதுக்குகிறது” என்றார்.
எப்படியெல்லாம் நடக்கிறது மோசடி?
பல ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்துக்கு பொதுமக்களின் வருகை குறைவாக இருப்பதைப் பயன்படுத்தி, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்களிடம் செலவு கணக்கு நோட்டில் கையெழுத்து வாங்கிவிட்டு கூட்டத்தை முடித்துவிடுவார்கள். 100 நாள் வேலை திட்டத்தில் பயனாளி என்ற கணக்கில், பயனாளிகள் அல்லாதவர்களுக்கு அடையாள அட்டையை வைத்துக்கொண்டு, வேலையே செய்யாதவர்களுக்கு வேலை செய்ததாக கணக்கெழுதி பணத்தை எடுத்துக்கொள்வார்கள்.
மேலும், தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்களை திட்டங்களின் பயனாளிகளாக தேர்வு செய்வது, திட்டங்களின் மூலம் நிதியை அளிப்பது போன்றவற்றையும் செய்வார்கள். ஆனால், இளைஞர்கள் பலர் தற்போது கிராம சபையில் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கிராம சபை கூட்டத்துக்கு முன்பும், பின்பும் செலவு கணக்கு விவரங்களை ஊராட்சி செயலரிடம் கேட்டுப் பெறுகின்றனர். ஊராட்சியில் நடைபெறும் செலவு ரசீதையும் அவர்கள் கேட்டுப் பெறலாம் என்கிறார் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜூ.