

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலைமுன்பு போராட்டம் நடத்த முயன்றஇல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில்கடந்த 29-ம் தேதி திருநெல்வேலியில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய நெல்லை கண்ணன்,பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எச்.ராஜா அறிவிப்பு
இந்நிலையில் நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரி ஜனவரி 1-ம் தேதி மாலை 3 மணிக்கு மெரினா கடற்கரை காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அறிவித்திருந்தார். இதனால் கடற்கரை காந்தி சிலை பகுதியில் நேற்று நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மாலை 3.30 மணியில் இருந்து அங்கு வந்த பாஜகவினரை கைது செய்து அருகில் உள்ள சமூக நலக் கூடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
4.30 மணி அளவில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், ஊடகப் பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோர் காந்தி சிலை முன்பு அமர்ந்து, நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மெரினா கடற்கரையின் எந்தப் பகுதியிலும் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதால் அவர்களை போலீஸார் கைது செய்து அருகில் உள்ள சமூகநலக் கூடத்தில் தங்க வைத்தனர்.அப்போது பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘நாங்கள் நாட்டுக்கு எதிராகவோ, பாஜகவுக்காகவோ போராடவில்லை. நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சரை கொலை செய்யுமாறு பொதுக்கூட்டத்தில் தூண்டிய நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை’’ என்றார்.
போராட்டம் தொடரும்
எச்ராஜா கூறும்போது, ‘‘நெல்லை கண்ணனை கைது செய்யும் வரை எங்களின் போராட்டம் தொடரும். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து வியாழக் கிழமை (இன்று) அறிவிப்போம்’’ என்றார்.
இதற்கிடையே, பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சிட்டி சென்டர் சந்திப்பில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.