

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் பன்றிக் காய்ச்சலால் 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 1,216 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
நாடு முழுவதும் 2019-ம்ஆண்டு 28,714 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில் 1,216 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 5,091 பேரும், குஜராத்தில் 4,843 பேரும், டெல்லியில் 3,625 பேரும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பைப் பொறுத்தவரை அதிகபட்சமாக மகராஷ்டிராவில் 244 பேரும், ராஜஸ்தானில் 208 பேரும், மத்திய பிரதேசத்தில் 165 பேரும் இறந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு 1,008 பேர் பாதிக்கப்பட்டதில், 4 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.