Published : 02 Jan 2020 07:10 AM
Last Updated : 02 Jan 2020 07:10 AM

2 கட்டமாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்; இன்று வாக்கு எண்ணிக்கை: 315 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடக்கிறது

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்த லில் பதிவான வாக்குகளை எண் ணும் பணி 315 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங் களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள் ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிச.27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்ட மாக தேர்தல் நடத்தப்பட்டது.

முதல்கட்டமாக டிச.27-ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து 2-ம் கட்ட தேர்தல் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் 30-ம் தேதி நடந்தது. இதுதவிர, பல காரணங்களுக்காக முதல்கட்ட தேர்தலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30 வாக்குச் சாவடிகளுக்கும் மறுவாக்குப் பதிவு நடத்தப்பட்டது. 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் வாக்கு கள் பதிவாகின.

மேலும், 2-ம் கட்ட தேர்தலில் வாக்குச்சீட்டு மாறியதால் நிறுத்தி வைக்கப்பட்ட 9 வாக்குச்சாவடி களில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள், அந்தந்த பகுதிக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலைப் பொறுத்தவரை வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது. 4 பதவிகளுக்கும் தனித்தனி நிறத்தில் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும் பரீட்சார்த்த முறையில் 4 பதவிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த இயந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்துள்ளதால் முடிவுகள் வெளியாக தாமதம் ஏற்படும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. அதன்பின், வாக்குப் பெட்டிகளில் உள்ள வாக்குச்சீட்டுக்கள் எண்ணப்படுகிறது. இதற்காக போதிய மேஜைகள் போடப்பட்டுள்ளன. முதலில், வாக்குப் பெட்டிகளில் உள்ள சீட்டுகள் கொட்டப்பட்டு பதிவான வாக்குகள் சின்னங்கள் அடிப்படையில் பிரிக்கப்படும். அதன்பின்னரே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

4 அடுக்கு பாதுகாப்பு

வாக்கு எண்ணிக்கை முடிவை மாநில தேர்தல் ஆணையத்தின் ‘https://tnsec.tn.nic.in/என்ற இணையதள முகவரியில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், 315 மையங்களிலும் நடக்கும் வாக்கு எண்ணிக்கை, முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படுவதுடன், கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையரின் அலுவலகத்தில் இருந்தபடியே கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 27 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை இன்று மூட மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.

உச்ச நீதிமன்றம் மறுப்பு

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது..

‘நகர்ப்புற உள்ளாட்சி கள், எஞ்சியுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் தேர்தல்களை நடத்தி முடித்துவிட்டு, அதன்பிறகே மொத்தமாக முடிவுகளை அறிவிக்க வேண்டும். அதுவரை 27 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிவிக்கவும், ஜன..2 (இன்று) நடக்கவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தது. உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு தினமான நேற்று இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x