Published : 01 Jan 2020 09:35 PM
Last Updated : 01 Jan 2020 09:35 PM

பிரதமர் மோடி, அமித் ஷாவை அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு: நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதாகத் தகவல்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய புகாரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நெல்லை கண்ணனின் பேச்சுக்கு பா.ஜ.க சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து நெல்லை கண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

பா.ஜ.க சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது நெல்லை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பெரம்பலூரில் தனியார் விடுதியில் நெல்லை கண்ணன் கைது என தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவதூறாகப் பேசியதற்காக தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணன் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், பாஜகவினர் நெல்லை கண்ணன் இல்லத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.

மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதால், அவர் மீது அதிமுகவினர் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

காவல் ஆணையர் அலுவலகம் முன்பு நெல்லை கண்ணன் படத்தை செருப்பால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பெரம்பலூரில் நெல்லைக் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x