

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜன.2) அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன.
வாக்குப் பெட்டிகளை திறந்து, வாக்குச்சீட்டுகளை பிரித்து எண்ணுவது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர், 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:
ஒரு வாக்குச்சாவடி தொடர்புடைய வாக்குப் பெட்டிகளை பெற்றதும் அந்தப் பெட்டியில் வைக்கப்பட்ட முத்திரை சரியாக இருப்பதை உறுதி செய்த பிறகு வாக்குப்பெட்டி திறக்கப்படும்.
அதில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிறத்திலும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை மற்றும் நீல நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் முத்திரையிடப்பட்டு மடிக்கப்பட்டு இருக்கும்.
அவற்றில், பதவிக்கு ஏற்ற சீட்டுகளை பிரித்து எடுத்து எவ்வித சந்தேகங்களுக்கும் இடமளிக்காத வகையில் சீட்டுகள் அனைத்தையும் வேட்பாளர் அல்லது முகவர்களிடம் காட்டிவிட்டு அதற்கென மேஜை மீது உள்ள அறைகளில் பிரித்து போட வேண்டும்.
வாக்குச்சீட்டில் ஒரு வேட்பாளரின் கட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டு முத்திரையிடப்பட்டது, ஒரு வேட்பாளருக்கு ஒரு தெளிவான முத்திரையும் மற்றும் இரு வேட்பாளர்களை பிரிக்கக்கூடிய கருமை நிறம் படிந்த பகுதியில் ஒரு முத்திரையும் இருத்தல், ஒரு வேட்பாளரின் கட்டத்தில் அடையாளக் குறி தீர்க்கமாக இருந்தும் அச்சீட்டு தவறாக மடிக்கப்பட்டதின் காரணமாக வேறொரு சின்னத்தில் முத்திரை அச்சு மங்கலாகக் (கடிகாரம் சுற்றும் திசையில்) காணப்படுதல், ஒரு வேட்பாளருக்கான கட்டத்தில் தெளிவான முத்திரை இருந்தும் ஆனால் அந்த சீட்டைக் கவனமின்றி கையாண்டதில் விரல் ரேகை வேறொரு சின்னத்தில் இருத்தல் போன்ற வாக்குச்சீட்டுகள் செல்லத்தக்கவையாக கருதப்படும்.
மேலும், எந்த சின்னத்திலும் முத்திரை இல்லாதது, முத்திரை அச்சு பயன்படுத்தாமல் பேனா மூலம் டிக் செய்வது, கருமை நிறம் படிந்த பகுதியில் முத்திரை இடப்பட்டது, ஒன்றிற்கு மேற்பட்ட சின்னங்களில் முத்திரையிடப்பட்டது, முத்திரையின்றி விரல் ரேகை மட்டும் இருத்தல் போன்ற சீட்டுகள் செல்லத்தகாதவையாகும்.
மேலும், சந்தேகத்தை ஏற்படுத்தும் வாக்குச்சீட்டுகளை 'ஐ’ என்ற அறையில் சேகரிக்க வேண்டும்.
வாக்குச்சீட்டுகளை தலா 50 சீட்டுகள் கொண்ட கட்டுகளாகவும், எஞ்சியவற்றை தனியாகவும் கட்ட வேண்டும்.வாக்கு எண்ணிக்கை நிறைவுற்றதும் ஒவ்வொரு வாக்காளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவுகளை பதிவு செய்து அறிவிப்பர். இது குறித்து வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்ததோடு, கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணுவதற்கும் முடிவுகளை அறிவிப்பதற்கும் அனைத்து மையங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.