

ஆரணியில் புத்தாண்டை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு இட்லி, பரோட்டோ விற்பனையால் பொதுமக்கள் திரண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (43). இவர் சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் 'பிருந்தா உணவகம்' என்ற உணவகத்தை கடந்த 6 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக புத்தாண்டு தினத்தில் இட்லி, பரோட்டா உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், 2020 புத்தாண்டு தினத்தை முன்னிட்டும், பிருந்தா உணவகத்தில் ஒரு இட்லி ஒரு ரூபாய், ஒரு பரோட்டா ஒரு ரூபாய், அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒரு ரூபாய் விலையில் விற்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இதனால் இன்று (ஜன.1) காலை முதலே பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் ஒரு ரூபாய்க்கு இட்லி, பரோட்டாவை ஹோட்டலில் உண்டு மகிழ்ந்தனர். விற்பனை தொடங்கிய 3 மணிநேரத்தில் மட்டும் 2 ஆயிரம் பரோட்டா, 450 இட்லி, 100 வாட்டர் பாட்டில்கள் விற்பனை ஆகின.
இதுகுறித்து பிருந்தா உணவக உரிமையாளர் ஜெய்சங்கர் கூறும்போது, "இதில் நஷ்டம் ஏதும் இல்லை. ஆண்டு முழுவதும் உழைத்து சம்பாதிக்கின்றோம். இன்று மட்டும் பொதுமக்களுக்காக குறைந்த விலையில் விற்பனை செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.