

எதிர்க்கட்சிகளைத் தூண்டிவிடுவதாக முதல்வர் கூறும் செயலை நான் செய்யவே மாட்டேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் குற்றம் சாட்டி கடுமையாக விமர்சித்து இன்று (ஜன.1) செய்தியாளர்களிடம் கருத்துகளைத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து முதல்வரின் குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டு அதற்கான பதிலைத் தெரிவித்து கிரண்பேடி இன்று தந்த பதில் விவரம்:
"துணைநிலை ஆளுநர் கிரண்பேடி போட்டி அரசை நடத்துவதாகவும், நிர்வாகத்தில் தலையிடுவதாகவும் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டுகிறார். இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்ற மேல் முறையீட்டில் உள்ளது. தீர்ப்பு எந்நேரத்திலும் வெளியாக உள்ள சூழலில் இறுதித் தீர்ப்புக்காக அவர் காத்திருப்பதே நன்மை செய்யும்.
உண்மையில் நான் சண்டையிடுவதில்லை. நிதி வீணாவதைத்தான் தடுக்கிறேன். நிதி திசை மாற்றத்தையும் அரசு பட்ஜெட்டுக்குள் இருப்பதை உறுதி செய்கிறேன். மத்திய அரசு உத்தரவுப்படி பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் கிடைப்பதை ஊக்குவிக்கிறேன்.
எதிர்க்கட்சிகளை நான் தூண்டிவிடுவதாக முதல்வர் கூறும் செயலை நான் செய்ய மாட்டேன். முழு சுதந்திர விருப்ப அடிப்படையில்தான் அவர்கள் மனு தருகிறார்கள்.
அதேபோல் மாநிலத் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாகவும் என்மீது முதல்வர் குற்றம் சுமத்தியுள்ளார். உண்மையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக மத்திய அரசானது தலைமைச் செயலருக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால், சரியான செயல்முறை இல்லாமலும் விதிகளுக்கு எதிராகவும் முதல்வரால் பரிந்துரைக்கப்பட்டவர் இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக ஆணையர் பதவிக்கு உரியவரை தன்னிச்சையாக நியமிக்காமல், விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வு செய்யவே தலைமைச் செயலருக்கு உள்துறை உத்தரவிட்டுள்ளது".
இவ்வாறு கிரண்பேடி தெரிவித்தார்.