

அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று (ஜன.1) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் கிழக்கு திசைக்காற்றும் மேற்கு திசைக்காற்றும் சந்திக்கின்ற பகுதி தமிழகப் பகுதியில் நிலவுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது.
பதிவான மழை விவரங்களின் அடிப்படையில் செம்மஞ்சேரியில் 4 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் கோலப்பாக்கத்தில் 3 செ.மீ., சென்னை விமான நிலையத்தில் 3 செ.மீ., செங்கல்பட்டில் 2 செ.மீ., சோளிங்கரில் 2 செ.மீ., தாம்பரத்தில் 2 செ.மீ., பூந்தமல்லியில் 2 செ.மீ., ஸ்ரீபெரும்புதூரில் 2 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 செ.மீ., உத்திரமேரூரில் 2 செ.மீ., பூந்தமல்லியில் 2 செ.மீ., மகாபலிபுரத்தில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் இரு தினங்களைப் பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் இடைவெளி விட்டு ஒரிரு முறை லேசானை மழை பெய்யக்கூடும்".
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.