

தனிப்பட்ட முறையில் ஒருவரை விமர்சனம் செய்யக்கூடாது. கொள்கை ரீதியாக விமர்சனம் செய்யலாம் என பிரமதர், உள்துறை அமைச்சர் மீதான நெல்லை கண்ணன் சர்ச்சைக் கருத்து தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (ஜன.1) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
"புதுச்சேரியி்ல் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்கள் 1.03 லட்சம் பேர் உள்ளனர். மீதமுள்ள 2.6 லட்சம் குடும்பத்தினருக்கு முதல்வரின் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் வரும் ஏப்ரலுக்குள் தொடங்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.18 கோடி தேவைப்படுகிறது.
புதிய ஆண்டில் புதுச்சேரியில் வேலைவாய்ப்புகளை அரசு மற்றும் தனியார் துறைகளில் கொண்டுவர வேண்டும். தரமான மருத்துவம், சிறந்த கல்வி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், அரசுக்கான வருவாயைப் பெருக்குதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கி மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆணையரை நீக்க மத்திய உள்துறை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை. இது தொடர்பான விஷயத்தில் கிரண்பேடியின் கடிதத்தைக் குப்பைத்தொட்டியில்தான் போட வேண்டும்.
ரேஷனில் இலவச அரிசி போடுவதற்குப் பதிலாக பணமாகத் தரவேண்டும் என்ற உள்துறையின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் நாட உள்ளோம்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
அப்போது பிரதமர், உள்துறை அமைச்சர் மீதான நெல்லை கண்ணன் சர்ச்சை கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தனிப்பட்ட முறையில் யாரையும் தவறாகப் பேசுவதுவும், விமர்சனம் செய்யவும் கூடாது. கொள்கை ரீதியில் விமர்சனம் செய்யலாம்" என்று நாராயணசாமி பதில் அளித்தார்.