

தமிழகத்தில் நாளை நடக்கவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குஎண்ணிக்கைக்கு தடை கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளரான செந்தில்ஆறுமுகம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 1996 முதல் 2011 வரை நடந்த உள்ளாட்சித் தேர்தல் அனைத்தும் ஒரே கட்டமாகவே நடத்தப்பட்டது. ஆனால், தற்போது தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரகஉள்ளாட்சி பகுதிகளில் மட்டும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் இன்னும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மேலும், நகர்ப்புறங்களிலும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால், தற்போது ஊரக உள்ளாட்சி பகுதிகளில் பதிவான வாக்குகள் வரும் ஜன.2 ல்(நாளை) எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு மட்டுமின்றி பஞ்சாயத்து விதிகளுக்கும் எதிரானது.
மற்ற பகுதிகளில் பாதிக்கும்
ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள் அரசியல் சார்பற்றவை. ஆனால், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் அரசியல் சார்புடையவை. 27 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் முடிவுகளை அறிவித்தால் மற்ற பகுதிகளில் நடக்கும் தேர்தல் பாதிக்கப்படும்.
எனவே, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமின்றி எஞ்சிய 9 மாவட்டங்களுக்கும் தேர்தலை நடத்தி முடித்த பிறகே 27 மாவட்டங்களில் பதிவான ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும், அதுவரை அந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதிக்கக் கோரி நாங்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. நகர்ப்புறங்களுக்கு எப்போது தேர்தல் நடைபெறும் என்ற குழப்பமான சூழல் உள்ளது. ஊரகப்பகுதிகளுக்கும், நகர்ப்புறங்களுக் கும் தனித்தனியாக தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க அனுமதித்துவிட்டால், எதிர்காலத்தில் கிராமப் பஞ்சாயத்துக்களுக் கும், ஒன்றிய பஞ்சாயத்துக்களுக் கும்கூட தனித்தனியாக தேர்தலை நடத்துவர். அது மேலும் சிக்கலைஏற்படுத்துவதுடன், பொதுமக்க ளின் வாக்குரிமையையும் பறித்துவிடும். எனவே, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் பதிவான வாக்குகளை ஜன.2 (நாளை)அன்று எண்ணவும், முடிவுகளை அறிவிக்கவும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியுள் ளார்.
இந்த மனுவை புத்தாண்டு விடுமுறை தினமான இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக முறையீடு செய்ய உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.