Published : 01 Jan 2020 08:07 AM
Last Updated : 01 Jan 2020 08:07 AM

மகிழ்ச்சி, அமைதி, முன்னேற்றம் நிலவட்டும்: ஆளுநர், முதல்வர், கட்சித் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை விமான நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

சென்னை

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: புத்தாண்டு விடியல் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும் என இந் நன்னாளில் வாழ்த்துகிறேன்.

முதல்வர் பழனிசாமி: வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து,வெற்றிகளைப் பெற்று புதிய சாதனைகளைப் படைத்து, வளமான தமிழகத்தை படைத்திடுவோம் என இந்த ஆங்கிலப் புத்தாண்டில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம். அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும், வளம் பெருகட்டும், அமைதி நிலவட்டும்.

அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி: தமிழகமக்கள் அனைவரும் தங்களது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சியும், மேன்மையும் அடைந்திட மக்கள்நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்ற உறுதிமொழியை எங்கள் புத்தாண்டு செய்தியாகக் கூறி கொள்கிறோம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: இந்திய சமூகம் காலம்காலமாக காப்பாற்றி வந்திருக்கும் சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, மனிதநேயம் ஆகிய மாண்புகளை எந்நாளும் காக்க இந்நன்னாளில் உறுதி ஏற்போம். 2020-ம் ஆண்டு அனைருக்கும் நன்மை செய்யும் ஆண்டாக அமையட்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: புதிய உற்சாகமும், புத்தெழுச்சியும், அமைதியும், நல்லிணக்கமும் தழைத்து, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: இப்புத்தாண்டில் மக்களுக்கு அனைத்துநலன்களும், வளங்களும் கிடைக்கும். பொருளாதாரம் வளரும். மகிழ்ச்சி பெருகும். அமைதியும், நிம்மதியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: 2019-ம் ஆண்டு பல சோதனைகளை தந்தது. மலரும் 2020-ம் புத்தாண்டு அழிவுக்கு இடம் தராத, புத்தாக்கப் பகுத்தறிவுப் புத்தாண்டாக மலரட் டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: 2020-ம் ஆண்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், வாழ்வில் நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: நாடு முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில் பிறக்கும் புதிய ஆண்டில், நாட்டு மக்களின் ஒற்றுமையால் இருள் நீங்கட்டும், புத்தாண்டு மலரட்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: மத்திய பாஜக அரசின்நாசகரப் பொருளாதார நடவடிக்கைகளையும், அதற்கு ஆதரவு அளிக்கும் அதிமுக அரசின் நடவடிக்கைகளையும் மக்கள் போராட்டங்கள் மூலம் முறியடிக்க உறுதி ஏற்போம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: எந்நாளும் துன்பத்தில் உழல்கின்ற விவசாயிகளுக்கு வருகின்ற காலம் துயர் துடைக்கின்ற காலமாக அமையும் என்ற நம்பிக்கையோடு அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகத்தில் விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் மேம்படவும், வேலைவாய்ப்புகள் பெருகவும், நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படவும் இப்புத்தாண்டு வழி வகுக்கட்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தமிழக மக்கள்ஒவ்வொருவருக்கும் வளர்ச்சியை யும், உத்வேகத்தையும் தருவதற்கு இப்புத்தாண்டு நம்பிக்கைகளை விதைக்கட்டும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல நேர்மையான, அறிவார்ந்த தலைமை வேண்டும் என்ற நம் சிந்தனை செயல் வடிவம் பெற வேண்டிய ஆண்டு. நாம் அனைவரும் இணைந்து களம் கண்டால் தரணியில் தமிழகம் தழைத்தோங்கி பாரதி கனவு கண்டது போல வான் புகழ் கொண்ட தமிழகமாக மீண்டும் ஆக்கலாம். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்: பழைய ஆண்டு கற்றுத் தந்த பாடங்களில் இருந்து புதிய ஆண்டில் வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது காலம் நமக்கு கற்றுத் தரும் அறிவுரை. புதிய கனவுகளோடு, நம்பிக்கைகளோடு புத்தாண்டை வரவேற்போம்.

இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர்: 2020-ம்ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் கூற்றையும், கனவையும் நனவாக்கும் வகையில், அந்த இளைஞர்களின் கையில் இப்புத்தாண்டைக் கொடுப்போம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், இந்திய தேசிய லீக் கட்சி தேசிய பொதுச் செயலாளர் நிஜாமுதின், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு முஸ்லிம் லீக்கட்சி நிறுவன தலைவர் முஸ்தபா, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவன தலைவர் ந.சேதுராமன், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் ஏ.நாராயணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x