

காற்று மாசுபடுவதை தடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு ஒற்றைக் காலில் சைக்கிள் ஓட்டி வரும் மாற்றுத் திறனாளி இளைஞர் 3 தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் வந்தார். காற்று மாசுபடுவதை தடுக்க அனைவரும் வீடுகளில் மரக்கன்றுகளை நடுங்கள் என்றும் அவர் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
ராமாநாதபுரம், ஆயுதப்படை குடியிருப்பு, திருநகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் விஜயசாமியின் மகன் வி.மணிகண்டன்(36). இவர் 10-ம் வகுப்பு படிக்கும் காலத்தில் கிரிக்கெட் விளையாடும்போது கீழே விழுந்ததில் இவரது இடதுகால் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து அந்தக் கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. மாற்றுத் திறனாளியான இவருக்கு தாமரைச் செல்வி(32) என்ற மனைவியும், விஜய சௌந்தர்யா(7), விஜயசாலினி(1) என்ற 2 மகள்களும் உள்ளனர்.
காற்று மாசடைவதை தடுக்க வலியுறுத்தி கடந்த 12-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது ஒற்றைக் காலில் சைக்கிள் ஓட்டியபடி இவர் புறப்பட்டார். வழியில் காற்று மாசுபடுவதை தடுக்க வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இவர் நேற்று காஞ்சிபுரம் வந்தடைந்தார். பொதுமக்களுக்கு காற்று மாசுபடுவதை தடுக்க வலியுறுத்தியும், மரக்கன்றுகளை நட வலியுறுத்தியும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். இது தொடர்பாக துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.
கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இவர் திருநெல்வேலி, திண்டுக்கல், தர்மபுரி, வேலூர் வழியாக காஞ்சிபுரம் வந்தடைந்தார். ஓரிரு நாட்களில் சென்னை சென்று, தமிழக முதல்வரை சந்தித்து காற்று மாசடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்க உள்ளதாகவும் மணிகண்டன் தெரிவித்தார்.