ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தையிடம் சிபிஐ விசாரணை

ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தையிடம் சிபிஐ விசாரணை
Updated on
1 min read

ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீபிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் பாத்திமா லத்தீப்(20). இவர் சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில், பெண்கள் விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு எம்.ஏ மானுடவியல் படித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு தனது அறைக்குள் சென்றவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கோட்டூர்புரம் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, விசாரணை அதிகாரியும் கூடுதல் துணை ஆணையருமான மெகலீனா ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த 15-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் இருந்த வழக்கு விசாரணை ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஆவணங்களை ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், இயற்கைக்கு மாறான மரணம் (174) என்ற பிரிவில் புதியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீபிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.

விசாரணை முடிந்து வெளியே வந்த அப்துல் லத்தீப், செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனது மகள் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த கோட்டூர்புரம் போலீஸாரின் நடவடிக்கைகளுக்கு பின்னால் யாரோ உள்ளனர். அவர்கள் ஆதாரங்களை மறைக்க முயன்றதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன். தனது மகள் மரணத்துக்கு நீதி கேட்டு, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் தமிழக, கேரள முதலமைச்சர்கள் என எல்லா இடங்களுக்கும் சென்றுவிட்டேன். இனி வேறெங்கும் செல்ல வழி இல்லை. சிபிஐ விசாரணையில் நியாயம் கிடைக்கும் என எதிர்பார்த்து இருக்கிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in