தமிழகம் முழுவதும் முகத்துவாரங்களை தூர்வார ரூ.1,000 கோடி நிதி: மத்திய அரசு அனுமதிக்காக 3 ஆண்டுகளாக காத்திருப்பு
தமிழகம் முழுவதும் முகத்துவாரங்களை தூர்வாரி தேவையான இடங்களில் கல்சுவர் அமைக்க மத்திய அரசிடம் ரூ.1,000 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளாக மத்திய அரசின் அனுமதிக்காக மீன்வளத் துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், விசைப் படகு, ஃபைபர் படகு, நாட்டுப் படகு உள்ளிட்டவற்றின் மூலம் மீன்பிடிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பழவேற்காடு, சின்னமுட்டம் உட்பட சென்னை முதல் கன்னியாகுமரி வரை 17 முகத்துவாரங்கள் உள்ளன.
இவற்றை தூர்வாரி தேவையான இடங்களில் கல்சுவர் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்காக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் ரூ.1,000 கோடி நிதி கோரப்பட்டது. முகத்துவாரங்களை தூர்வாரி மேற்கொள்ளவுள்ள பணிகளை அறிக்கையாக தயாரித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், மத்திய அரசு அனுமதி தரவில்லை. இதனால், 3 ஆண்டுகளாக மத்திய அரசின் நிதியைப் பெற தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முகத்துவாரங்களில்தான் மீன்கள் உற்பத்தி அதிக அளவில் இருக்கும். முகத்துவாரத்தை தூர்வாராமல் விட்டால் மீன்கள் உயிர் வாழ தகுதியற்ற பகுதியாக மாறிவிடும்.
இதன் அடிப்படையில்தான் மீனவர்களும் முகத்துவாரங்களை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மீனவர்களின் கோரிக்கையின் அடிப்படையில்தான் மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டது. நிதி இதுவரை கிடைக்காதபோது, தமிழக அரசு ஒதுக்கும் நிதியைக் கொண்டு அவ்வப்போது தூர்வாரி வருகிறோம். இருப்பினும், நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த முடியவில்லை.
முகத்துவாரங்களில் தூர்வாரி கல்சுவர் அமைப்பது உட்பட மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தவறு இருப்பதாக அவர்கள் சுட்டிகாட்டுவதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப மாற்றங்களை செய்து அளித்து வருகிறோம்.
விரைவில் மத்திய அரசு நிதியை வழங்க அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நிதி கிடைத்துவிட்டால் முகத்துவாரங்களை தூர்வாரி கல்சுவர் அமைத்து இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
