

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுக்கு அதிமுக உரிய அங்கீகாரம் தரவில்லை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டிவனம் அருகே ஓமந்தூரில் பாமக சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ் எம்.பி பேசியது:
கூட்டணிக்கு சென்றதால் நாம் கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை. கூட்டணிக்கு சென்றது அரசியல் கால கட்டம். வரும் சட்டமன்ற தேர்தலில் நம் வியூகம் என்ன என்பதை ராமதாஸ் விரைவில் சொல்வார்.
நாம் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்காவிட்டால் அதிமுகஆட்சியை தக்க வைத்திருக்க முடியாது. சட்டமன்ற இடைத்தேர்தலில் 24 எம்எல்ஏ சீட்டுகளைஅதிமுக போட்டியிட விட்டுக் கொடுத்தோம். நாம் கூட்டணியே வேண்டாம் என்ற கொள்கையை மாற்றி, கூட்டணி அமைத்தோம். ஆனால் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக நமக்கு கால் சீட்டு, அரை சீட்டு, ஒன்றேகால் சீட்டு, ஒன்றரை சீட்டு கொடுத்தார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உழைத்தவர்களுக்கு சீட் வாங்கித் தராமல் உங்கள் விருப்பு, வெறுப்புக்கும் ஜால்ரா கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்கவா நாம் கட்சி நடத்துகிறோம்? வருகிற 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு சீட் கொடுப்பது என்று கட்சித் தலைமை முடிவெடுக்கும். ஆளும் கட்சித் தலைமை இனிவரும் காலங்களில் எங்களின் கருத்துகளை ஏற்று, சரி செய்ய வேண்டும்.
வரும் ஆண்டுகளில் திமுக மூலம் நமக்கு கடும் எதிர்ப்பு ஏற்படும். அவர்களின் பொய் பிரச்சாரத்தை நாம் முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.