Published : 31 Dec 2019 08:39 PM
Last Updated : 31 Dec 2019 08:39 PM

நெல்லை கண்ணனைக் கைது செய்யாவிட்டால் மெரினா புரட்சி: எச்.ராஜா எச்சரிக்கை

பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து சர்ச்சையாகப் பேசியதாக நெல்லை கண்ணன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவரை இன்றே கைது செய்யவேண்டும். இல்லாவிட்டால் நாளை மெரினாவில் போராட்டம் நடத்துவேன் என எச்.ராஜா எச்சரித்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் பாதுகாப்பு குறித்து பேச்சாளர் நெல்லை கண்ணன் சர்ச்சையாகப் பேசியது பாஜக மற்றும் இந்து அமைப்பினர் இடையே எதிர்ப்பலையை ஏற்படுத்தியது. அவர் வீட்டுமுன் காலையில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

அதற்கு முன் பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அவர் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார

நெல்லை கண்ணனைக் கைது செய்யாவிட்டால் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து கடற்கரையில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம் என பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

அவரது பதிவு:

நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி 1.1.2020 பிற்பகல் 3 மணிக்கு மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே LG, பொன்னார், CPR மற்றும் நான் Sit in Dharna மேற்கொள்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

2019-ல் நடந்த குற்றத்திற்கு 2019-லேயே நடவடிக்கை தேவை. இல்லையெனில் 2020 போராட்ட ஆண்டாகத் தொடங்கும்.

நெல்லை கண்ணன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி. கண்ணன் பேசியுள்ளது அவதூறு பேச்சல்ல. தமிழகத்தில் சதி நடத்த திட்டமிடுவதாகவே தெரிகிறது.

நெல்லை கண்ணனை எந்த ஆன்மிக நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நெல்லை கண்ணனை ஆதரிக்கும் சீமானும் கைது செய்யப்பட வேண்டும். இந்து விரோதமாக பேசுவதற்குப் பெயர் கருத்துச் சுதந்திரம் அல்ல”.

இவ்வாறு எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x