

கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கியை சுட்டுக் கொன்றவர்கள் மீது கர்நாடக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், மிகச் சிறந்த கன்னட எழுத்தாளருமான எம்.எம்.கல்புர்கி மர்ம நபர்களால் நேற்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
மூட நம்பிக்கைகளை எதிர்த்து தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்து வந்தவர் கல்புர்கி. கலபுரகி அவர்கள் கொல்லப்பட்டதற்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்புர்கி அவர்களைச் சுட்டுக் கொன்றவர்கள் மீது கர்நாடக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமென்று நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.