Published : 31 Dec 2019 10:33 AM
Last Updated : 31 Dec 2019 10:33 AM

பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் விவகாரம்: திமுக பிரமுகர் உட்பட 4 பேரை பிடிக்க 4 தனிப்படைகள்

பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, திமுக பிரமுகர் உட்பட 4 பேரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை வடவள்ளி அருகே தொண்டாமுத்தூர் சாலை ஜெயலட்சுமி நகரில் அன்னூர் ஒன்றிய திமுக செயலாளர் ஆனந்தன் (எ) சொக்கம்புதூர் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பிரம்மாண்ட வீடு உள்ளது. இங்கு கரும்புக்கடை ஷேக், பிரமோஷ், நிலம்பூரை சேர்ந்த ரஷீத் ஆகியோர் தங்கியுள்ளனர். இந்த வீட்டில், கடந்த 28-ம் தேதி வடவள்ளி காவல்துறையினர் சோதனை நடத்தியதில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 தாள்கள் ரூ.2.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, மேற்கண்ட 4 பேர் மீதும் மோசடி, கூட்டுச்சதி, செல்லாத நோட்டுகளை பதுக்கி வைத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வடவள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேற்கண்ட 4 பேரையும் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில், பேரூர் சரக டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், மேற்கண்ட 4 பேரையும் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறையினர் கூறும்போது, ‘‘ரிசர்வ் வங்கியில் மாற்றித் தருகிறோம், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்பது போன்ற காரணங்களை கூறி, தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை, பேப்பர் கட்டுகளுடன் இணைத்து மோசடி செய்து மாற்றி வந்துள்ளனர். இவ்வாறு பழைய நோட்டு உள்ளதை நம்பாதவர்களிடம்,செல்போன் வீடியோ கால் மூலமாகவும், நேரடியாக வீட்டுக்கு வரவழைத்தும் அந்த நோட்டுகளை காட்டியுள்ளனர்.

தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை செல்போன் வீடியோ மூலமாக காட்டினால் ரூ.15 லட்சம் கூடுதலாகவும், நேரடியாக வீட்டுக்கு வரவழைத்து காட்டினால் ரூ.25 லட்சம் கூடுதலாகவும் வசூலித்துள்ளனர். ரூ.ஒன்றரை லட்சம் புது நோட்டு கொடுத்தால், அதற்கு பதில் ரூ.3 லட்சம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளை கொடுத்துள்ளனர். கைப்பற்றப்பட்ட பணம், ஆனந்தனுக்கு சொந்தமானதாக இருக்கலாம். இந்த கும்பல் இதுவரை பலரிடம் தொகையை கைமாற்றி இருக்கலாம். இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம்.

தலைமறைவான 4 பேரை தேடி வருகிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x