Published : 31 Dec 2019 08:35 AM
Last Updated : 31 Dec 2019 08:35 AM

தமிழக பாஜக புதிய தலைவர் யார்?- சென்னையில் 5-ம் தேதி கருத்துகேட்பு கூட்டம்

சென்னை


தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக வரும் ஜனவரி 5-ம் தேதி சென்னையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடக்க உள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. பாஜக கட்சி விதிகளின்படி 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கையும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சி தேர்தலும் நடத்தப்படும். அதன்படி. கடந்த 2018 டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய உள்கட்சி தேர்தலும் உறுப்பினர் சேர்க்கையும் மக்களவைத் தேர்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கடந்த ஜூலை 6-ம் தேதி பாஜக உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் கடந்த அக்டோபரில் உள்கட்சித் தேர்தல் தொடங்கியது. கிளை, மண்டல தலைவர் தேர்தல் முடிந்து மாவட்டத் தலைவர் தேர்தல் நடந்துவந்தது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் நேற்றுடன் முடிந்து விட்டதால் பாஜக மாவட்டத் தலைவர் தேர்தலை விரைந்து முடிக்குமாறு கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்யும் பணியை கட்சித் தலைமை தொடங்கியுள்ளது. இதற்காக வரும் ஜனவரி 5-ம் தேதி சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடக்க உள்ளது. இதில் அகில இந்தியப் பொதுச்செயலாளர்கள் இருவர் கலந்துகொண்டு, யாரை மாநிலத் தலைவராக நியமிக்கலாம் என்று மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களிடம் கருத்து கேட்கவுள்ளனர். அதன் அடிப்படையில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மாநிலத் தலைவர் நியமிக்கப்படுவார் என்று பாஜக நிர்வாகி ஒருவர் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் பதவியைக் கைப்பற்ற முன்னாள் மாநிலத் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், உள்ளிட்டோர் முயற்சி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x