Published : 31 Dec 2019 08:33 AM
Last Updated : 31 Dec 2019 08:33 AM

தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: போலீஸார் உஷார்நிலையில் இருந்து கண்காணிக்க உத்தரவு

புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆங்கிலப் புத்தாண்டு ‘2020’ நாளை பிறக்கிறது. இதையொட்டி சென்னை உட்பட அனைத்து நகரங்களிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

புத்தாண்டை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனை நடக்கின்றன. புத்தாண்டு தினத்தன்று கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னையில் மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மக்கள் இன்று நள்ளிரவு அதிக அளவில் கூடுவார்கள். இதையொட்டி, சென்னையில் முக்கிய இடங்களில் இன்று இரவு 9 மணி முதல் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

சென்னை காவல் மாவட்டங்களில் 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில், தாழ்வாக பறக்கும் 25 டிரோன் கேமராக்கள் மூலமாகவும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். பைக் பந்தயத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் பெண்களிடம் அத்துமீறுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

‘மெட்ரோ’ நேரம் நீட்டிப்பு

சென்னையில் பொதுமக்கள், மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக இன்று (31-ம் தேதி) இரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணி வரை 28 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் 4 தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக மாநில நுண்ணறிவு பிரிவு போலீஸார் கடந்த 18-ம் தேதி எச்சரித்தனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்து இருக்கலாம் என்று தமிழக போலீஸாரை மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் தமிழகத்தில் சுற்றித் திரிவதாகவும் மத்திய உளவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வாகன சோதனையும் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் போலீஸார் உஷார்நிலையில் இருந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x