Published : 30 Dec 2019 06:18 PM
Last Updated : 30 Dec 2019 06:18 PM

'இந்து தமிழ்' செய்தி: ரயில்வே தொழிலாளியை நேரில் அழைத்துப் பாராட்டிய ஸ்டாலின்: அரசுப் பணி கிடைக்க உதவுவதாக உறுதி

உயிரிழந்த உடல்களை மீட்கும் ரயில்வே தொழிலாளி செல்வராஜ் குறித்த செய்தி 'இந்து தமிழ்' நாளிதழில் இன்று வெளியானதை அடுத்து அவரை நேரில் அழைத்து திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (49). இவருக்கு 15 வயதாக இருக்கும்போதே, இவரது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். குடும்ப வறுமையால், தனது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்து விட்டு, சென்னை சென்ட்ரலில் உரிமம் இல்லாத சுமை தூக்குபவராக (கூலி) தனது பணியைத் தொடங்கினார்.

ரயில் விபத்துகளில் சிக்கி இறப்போரின் உடல்களையும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வோரின் உடல்களையும் மீட்கும் பணியில் செல்வராஜ் ஈடுபட்டு வருகிறார். வறுமை நிலையிலும் கடந்த 1988-ம் ஆண்டு தொடங்கி சுமார் 30 ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்து வருகிறார். இதுவரை, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களை மீட்டுள்ளார். ஆனால், ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலுக்கான அங்கீகாரம் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று மன வருத்தத்துடன் கூறியிருந்தார் செல்வராஜ்.

தனக்கு தற்போது 50 வயது நெருங்கி விட்டதாகவும் நிரந்தர வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதால் தெற்கு ரயில்வேயில் ஏதாவது ஒரு சாதாரண வேலையை கருணை அடிப்படையில் வழங்க வேண்டுமெனவும் செல்வராஜ் 'இந்து தமிழ்' நாளிதழ் வாயிலாக ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைப் படித்த திமுக தலைவர் ஸ்டாலின், செல்வராஜை நேரில் அழைத்துப் பாராட்டினார். அவருக்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் மூலம் அரசுப் பணி கிடைக்க உதவுவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், ''ரயில் விபத்துகள், தற்கொலைகளில் உயிரிழந்த உடல்களை மீட்கும் பணியை தனது வறுமைச் சூழலிலும் 30ஆண்டுகளாகச் செய்து வரும் மகத்தான மனிதர் செல்வராஜை, நேரில் வரவழைத்துச் சந்தித்தேன்.

முருகனுக்கு அரசுப் பணி கிடைக்க உதவி செய்யுமாறு மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறனைக் கேட்டுக் கொண்டுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

— M.K.Stalin (@mkstalin) December 30, 2019

இந்தச் சந்திப்பின்போது முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x