Published : 30 Dec 2019 06:54 PM
Last Updated : 30 Dec 2019 06:54 PM

உள்ளாட்சித் தேர்தல் துளிகள்: வாக்களிக்க வந்த மாற்றுத்திறனாளியை சுமந்து சென்ற காவலர்; பாராட்டிய வாக்காளர்கள்

வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட காளனம்பட்டியில் வாக்களிக்க வாகனத்தில் வந்த மாற்றுத்திறனாளியை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் சுமந்து சென்று வாக்களிக்க உதவினார்.

திண்டுக்கல் மாவட்டம் இரண்டாம்கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றது. வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட குளத்தூர் ஊராட்சியிலுள்ள காளனம்பட்டி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க இளம்வயதில் போலியோ பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளி ஒருவர் வந்தார்.

கிருஷ்ணசாமி என்ற அந்த நபர் ஷேர் ஆட்டோவில் வந்து இறங்கி வாக்குச்சாவடிக்கு கை, கால்களை ஊன்றியபடி தவழ்ந்து சென்றார். அவரைப்பார்த்த பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் முத்துராஜ் அவரை தூக்கிச் சுமந்து வந்து சக்கரநாற்காலியில் அமரவைத்து வாக்குச்சாவடிக்குள் அழைத்துச்சென்று வாக்களிக்க உதவினார்.

மீண்டும் வாக்குச்சாவடியில் இருந்து சக்கரநாற்கலியில் அழைத்து வந்தும், தூக்கிச்சென்று வாகனத்தில் அமரவைத்தார். காவலர் முத்துராஜின் இந்த செயலை வாக்களிக்க வந்த மக்கள் பாராட்டினர்.

கூலித் தொழிலாளியான மாற்றுத்திறனாளி கிருஷ்ணசாமி, இயலாத நிலையிலும் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.

இதுகுறித்து கிருஷ்ணசாமி கூறுகையில், "ஒவ்வொரு வாக்காளரும் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றவேண்டும். இதனால் எனது வீட்டில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு எனது மனைவியை அழைத்துக்கொண்டு வந்தேன். எனது வாக்கு எனது உரிமை என்பதால் தான் சிரமப்பட்டு வாக்களிக்க வந்தேன். வாக்குச்சாவடிக்குள் வந்தவுடன் என் நிலையை பார்த்து தேர்தல் பணியில் இருந்தவர்கள் முன்னுரிமை கொடுத்தனர். நான் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக என்னை தூக்கிச்சென்றும், சக்கரநாற்காலியில் அமரவைத்து அழைத்துச்சென்றும் அங்கிருந்த போலீஸ்காரர் உதவினார்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x