Last Updated : 30 Dec, 2019 05:23 PM

 

Published : 30 Dec 2019 05:23 PM
Last Updated : 30 Dec 2019 05:23 PM

கிராமங்களின் வளர்ச்சிக்குப் பாடுபடும் நபரை தேர்ந்தெடுக்க வாக்களித்தோம்: மதுரையில் முதன்முறையாக வாக்களித்தவர்கள் கருத்து

முதன்முறை வாக்காளர்கள் பிரியதர்ஷினி, கவிதாதேவி, விக்னேஷ்

மதுரை

கிராம வளர்ச்சிக்குப் பாடுபடும் நபர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில் தங்களது வாக்குகளை பதிவு செய்திருப்பதாக முதல் முறையாக வாக்களித்த மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.

மதுரை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி தலைவர், உறுப்பினர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது.

காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று, ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். இத்தேர்தலில் முதல்முறையாக கல்லூரி, மாணவ, மாணவியர் ஏராளமானோர் ஆர்வமுடன் வாக்களித்துள்ளனர்.

மதுரை பனையூர் அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் முதன்முறையாக வாக்களித்த கல்லூரி மாணவி கவிதாதேவி கூறுகையில்,‘‘முதல் தடவையாக வாக்களிக்க கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. குடும்பத்தினர் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என, கூறினாலும் எனக்கான உரிமையை நான் நிலை நாட்டினேன்.

தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் படித்தவராக இருந்தால் கிராம வளர்ச்சிக்கு நல்லது செய்வார், குறைகளைக் காதுகொடுத்துக் கேட்பார் என்ற நம்பிக்கையில் எனது வாக்கினைப் பதிவு செய்துள்ளேன். என்னை போன்று வாக்காளர்கள் நம்பிக்கை வைத்த நபர் தேர்ந்தெடுக்கும்போது, அவர் ஊருக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்,’’ என்றார்.

சாமநத்தம் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் ஓட்டுப்போட்ட மற்றொரு கல்லூரி மாணவி எம்.பிரியதர்ஷனி கூறும்போது, ‘‘எங்களது ஊர் மக்கள் நம்பிக்கை வைத்து, ஓட்டு போடும் நபர் தேர்வாகும்போது, ஊருக்கு நல்ல திட்டங்களை கொண்டுவரவேண்டும். அதற்குத் தகுதியான நபர்களையே எங்க ஊர் மக்கள் தேர்ந்தெடுப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சேகரிப்பை போன்று, பொதுத் தேர்தலிலும் வேட்பாளர்கள் மக்களை சந்திக்கவேண்டும். அவர்களின் குறைகளைக் கேட்டறியவேண்டும். இத்தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்கக் கிடைத்த வாய்ப்பைப் பெருமையாக கருதுகிறேன்’’ என்றார்.

தனக்கன்குளம் அரசு பள்ளி வாக்குச்சாவடியில் முதல்முறையாக வாக்களித்த விக்னேஷ் கூறுகையில், "நான் சென்னையில் பி.காம் படிக்கிறேன். தற்போது உள்ளாட்சி தேர்தலில் முதல்முறையாக வாக்களிப்பதற்காக சென்னையிலிருந்து வந்துள்ளேன். முதல் முறையாக வாக்களிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும், ஊராட்சி மன்றத்திற்கு வார்டு உறுப்பினர், தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய 4 பேரை தேர்ந்தெடுப்பதற்கு 4 வாக்கு அளித்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

வாக்களித்த 98 வயது மூதாட்டி..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் தனக்கன்குளத்தில் உள்ள அரசு பள்ளி வாக்குச்சாவடியில் 98 வயது மூதாட்டி கருத்தம்மாள் வாக்களித்தார். தள்ளாத வயதிலும் வாக்களிப்பதற்கு உதவியாக தனது பேத்தியை அழைத்து வந்து வாக்களித்தார்.

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x