Published : 30 Dec 2019 03:18 PM
Last Updated : 30 Dec 2019 03:18 PM

எதிர்காலத்தில் அரசியல் அநாதை ஆவீர்கள்; அமைச்சர் உதயகுமாருக்கு திமுக எச்சரிக்கை

ஐ.பெரியசாமி - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: கோப்புப்படம்

சென்னை

எதிர்காலத்தில் அரசியல் அநாதையாக வேண்டிய நிலை ஏற்படும் என, அமைச்சர் உதயகுமாருக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஐ.பெரியசாமி இன்று (டிச.30) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசுக்கு மத்திய பாஜக அரசு அளித்த சான்றிதழை விமர்சனம் செய்த திமுக தலைவர் ஸ்டாலினைப் பார்த்து 'ஆத்திரத்தில் வெறுப்பை அள்ளிக் கொட்டுகிறார்' என அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை விட்டுள்ள அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தரத்திற்கு ஏற்ற பதவியைப் பெற்றிருந்தால் இப்படியெல்லாம் தரங்கெட்ட அறிக்கை விட மாட்டார். தகுதிக்கு மேற்பட்ட பதவியை விபத்தாகப் பெற்ற காரணத்தால் அமைச்சர், திமுகவின் வரலாறு தெரியாமலும், வெற்றி நாயகனாம் ஸ்டாலினின் பெருமைகள் தெரியாமலும் உளறிக் கொட்டுவது ஊழல் ஆணவத்தின் உச்சகட்டம் என்றே கருதுகிறேன்.

அமைச்சர் உதயகுமார் எப்படிப்பட்டவர்? ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை காலணி அணியாமல் ஒரு வேடம் போட்டார். அவர் மறைந்ததும் 'தியாகத்தின் திருவுருமே வருக… அரசுக்கு தலைமையேற்க வருக' என்று சசிகலாவுக்காக தனி வேடம் போட்டார்.

'விசுவாசத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்து கற்றுக்கொண்டோம்' என்று கூறி, 'கட்சியும், ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும்' என்று கூறி பிறகு சசிகலா காலையும் வாரி விட்ட உதயகுமாருக்கு ஸ்டாலின் பற்றியெல்லாம் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?

'எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் மருது சகோதரர்கள்' என்று மருது சகோதரர்களின் புகழ் பெற்ற வரலாறே தெரியாமல் திடீரென்று சுயநலனுக்காகப் பாராட்டுவார். பிறகு “முதல்வர் எடப்பாடி பழனிசாமி பண்பாளர். பணிவாளர்' என்று காதைப் பிளக்கும் ஜால்ரா அடிப்பார். படு வேகமாக நிறம் மாறும் அமைச்சர் உதயகுமாருக்கு அரசியல் ஒரு கேடா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

புதுப்புது வேடம் போடுவதில் கில்லாடியாக இருக்கும் உதயகுமார், மேடைக்கு வேண்டுமானால் நடிக்கலாம். அது அரசியலுக்கு அசிங்கமாகக்கூட அல்ல; மகா கேவலமாக இருக்கும் என்பதை ஏனோ பதவி மயக்கத்தில் மறந்து விட்டு தடுமாறி நிற்கிறார்.

மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பற்றியெல்லாம் கருத்துக் கூறும் துரும்பு அளவிலான தகுதிகூட உதயகுமாருக்கு இல்லை. ஆளுக்கு ஏற்றவாறு அடித்த ஜால்ராவால் அமைச்சர் பதவி பெற்றால் மட்டும் அந்தத் தகுதி வந்து விடுமா? அல்லது ஊழல்…ஊழல் என்று வருவாய்த் துறையில் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதால் வந்து விடுமா? இயற்கை பேரிடருக்குக் கொடுத்த நிதியை எல்லாம் உதயகுமார் எப்படிச் சுருட்டியிருக்கிறார்?

மறுசீரமைப்புப் பணிகளில் நடைபெற்றுள்ள ஊழல் என்ன? மக்களுக்குத் தெரியாதா? அதிமுக ஆட்சியில் ஸ்திரத்தன்மையுடன் இருப்பது ஊழலே அதுவும் உதயகுமார் போன்றோரின் ஊழல் மட்டுமே!

அதிமுக ஆட்சியின் மீது மக்கள் இன்று வெறுப்பில் இருக்கிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தல் வரும் போது உதயகுமார் உள்ளிட்ட எந்த அதிமுக அமைச்சரும் வாக்காளர்களைச் சந்தித்து வாக்குக் கூட கேட்க தெருவில் நடக்க முடியாது. அந்த அளவுக்கு மக்கள் கோபத்தில் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரிடம் மண்டியிட்ட உதயகுமார் இப்போது எடப்பாடி பழனிசாமியிடம் அதை விடக் குனிந்து மண்டியிட்டுவதை நான் குறை கூறவில்லை. அது அவருக்கு சுயநல அரசியல். அல்லது உள்கட்சி அரசியல். ஆனால் ஸ்டாலின் மீது கடும் சொற்களைப் பயன்படுத்துவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது.

ஈழத்தமிழர்கள், சிறுபான்மையின மக்கள் நலனுக்கு எதிரானது அதிமுக; அவர்களுக்குத் துரோகம் செய்யும் கட்சி அதிமுக; தமிழக மக்களின் நலனுக்கு விரோதமான கட்சி அதிமுக என்றெல்லாம் முத்திரை பதிக்கப்பட்டு விட்டது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்து, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமைப் பதிவேடு உள்ளிட்ட அத்தனையையும்ஆதரிக்கும் அதிமுகவுக்கு பாஜக அரசு அளித்துள்ள பரிசுதான் இந்தப் பாராட்டுப் பத்திரம்.

ஸ்டாலின் அளித்துள்ள அறிக்கையினால் தமிழக மக்களிடம் சில தினங்களாக பேட்டி, முழுப்பக்க பத்திரிகை விளம்பரம் போன்றவற்றால் போட்ட நல்லாட்சி வேடம் கலைந்து விட்டது என்ற எரிச்சலில் அமைச்சர் உதயகுமார் அலறுகிறார்; அறிக்கை விடுகிறார். ஆனால் நாவடக்கம் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர் என்பதால் எதை வேண்டுமானாலும் அறிக்கையாக விடலாம்; ஸ்டாலினை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்று நினைத்தால் ஆர்.பி.உதயகுமார் தான் எதிர்காலத்தில் அரசியல் அநாதையாக வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்து, அவர் செய்த ஊழல்களுக்கு சென்னை மத்திய சிறைச்சாலையா? அல்லது மதுரை மத்திய சிறைச்சாலையா என்பதை இப்போதே உதயகுமார் முடிவு செய்து கொள்ள வேண்டும்" என ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x