Published : 30 Dec 2019 01:34 PM
Last Updated : 30 Dec 2019 01:34 PM

போலி வாக்குச்சீட்டுகள் மூலம் வாக்குப்பதிவு செய்ய முயற்சி: கோவில்பட்டி அருகே வேட்பாளர்கள் சாலை மறியல்

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போலி வாக்குச்சீட்டுகள் மூலம் வாக்கு பதிவு செய்ய முயற்சி நடப்பதாகக் கூறி வேட்பாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இலுப்பையூரணி ஊராட்சி மன்றத்தில் 15 வார்டுகள் உள்ளன. தற்போது நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில், இலுப்பையூரணி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 13 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பார்வதி உயர்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், பகல் 12 மணி அளவில் இளைஞர் ஒருவர் ஏராளமான வாக்குச்சீட்டுகளுடன் நின்றிருந்ததைப் பார்த்த, வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் உடனடியாக அவரை மடக்கிப் பிடித்து அங்கிருந்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் அவர் வைத்திருந்த வாக்குச்சீட்டுகளையும் பறித்தனர். இதற்கிடையே போலீஸார் வசம் இருந்த அந்த இளைஞர் திடீரென மாயமானார்.

தகவல் அறிந்து அங்கு வந்த வேட்பாளர்கள் போலி வாக்குச்சீட்டுகளுடன் வந்த இளைஞரைத் தப்ப விட்ட போலீஸாரை கண்டித்தும், இதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வாக்குச்சாவடி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வட்டாட்சியர் மணிகண்டன், டிஎஸ்பி ஜெபராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்க வாசகம், காவல் ஆய்வாளர் சுதேசன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் தேர்தல் பறக்கும் படை மூலம் காவல்துறையில் புகார் வழங்கி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x