Published : 30 Dec 2019 01:36 PM
Last Updated : 30 Dec 2019 01:36 PM

சிஏஏ - என்ஆர்சி எதிர்ப்பு: எங்கள் வீட்டிலும் கோலம்; வந்து கைது செய்யுங்கள் - கே.எஸ்.அழகிரி

கோலம் போட்டவர்களைக் கைது செய்யச் சொல்லி காவல்துறையினருக்கு யார் உத்தரவிட்டது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் இன்று (டிச.30) இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில், கே.எஸ்.அழகிரி தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் கோலம் போட்ட பெண்கள் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, "கோலம் போட்டதற்காக கைது செய்வதென்பது, அராஜகத்தின் உச்சகட்டம், அறிவின்மையின் சிகரம். சராசரி பகுத்தறிவு உள்ள எந்த அரசாங்கமும் இந்தத் தவறான செயலைச் செய்ய மாட்டார்கள். பெண்கள் கோலம் போடுகின்றனர். அதில் தங்களின் கருத்தைப் பதிவு செய்கின்றனர். கருத்து சொல்வதற்கு இந்தியாவில் தடை ஏது? தனிமனிதக் கருத்துச் சுதந்திரத்திற்குத் தடை இல்லை. இந்த நாட்டைப் பிரிவினை செய்யலாம் என்று சொல்பவர்களைக் கூட இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்கிறது. இப்படி இருக்கையில், கோலம் போட்ட பெண்களைக் கைது செய்வது மிகவும் தவறு.

எங்கள் வீட்டிலும் இன்றைக்கு நாங்கள் கோலம் போட்டிருக்கிறோம். அதில் சிஏஏ - என்.ஆர்.சி கூடாது எனக் கோலம் போட்டிருக்கிறோம். வந்து எங்களையும் கைது செய்யச் சொல்லுங்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம், இவ்வளவு கீழ்த்தரமாக, இவ்வளவு அடிமைத்தனமாக, அறிவின்மையுடன், கொஞ்சம் கூட ஜனநாயகம் இல்லாமல் நடந்துகொள்வதை தமிழக காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒரு ஜனநாயக நாட்டில் இது இயல்பானது அல்ல. வன்முறைக்கு வேண்டுமானால் அரசு எதிராக இருக்கலாம். கருத்துச் சுதந்திரத்திற்கு அரசு எதிராக இருக்கக் கூடாது.

காவல்துறை யோசிக்க வேண்டும். காவல்துறையினர் கண்ணியம் மிக்கவர்கள். அவர்கள் ஒன்றும் அரசாங்கத்தின் வேலைக்காரர்கள் அல்ல. கோலம் போட்டவர்களைக் கைது செய்யச் சொல்லி அவர்களுக்கு யார் உத்தரவிட்டது. இதுகுறித்து விசாரணை செய்ய வெண்டும். இந்த அரசு ஓடி, ஒளியக்கூடிய பொறுப்பற்ற அரசு. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த அரசை நம்பி இவ்வளவு பெரிய வேலையில் காவல்துறை ஈடுபடக்கூடாது" என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x