Last Updated : 30 Dec, 2019 11:55 AM

 

Published : 30 Dec 2019 11:55 AM
Last Updated : 30 Dec 2019 11:55 AM

தோல்வி பயத்தால் திமுக ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து எதிர்க்கிறது: வாக்களித்த பின் தம்பிதுரை பேட்டி

வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருக்கும் தம்பிதுரை

தோல்வி பயத்தால் திமுக ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்று அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (டிச.30) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, சூளகிரி, கெலமங்கலம் ஆகிய 5 ஒன்றியங்களுக்கு இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிந்தகம்பள்ளி கிராமத்தில் அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை தனது வாக்கினைப் பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது தம்பிதுரை பேசியதாவது:

"மக்களுக்கு பல்வேறு நலப்பணிகளைச் செய்த காரணத்தால் நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கட்சி ஏகோபித்த வெற்றி பெறும். அதிமுக அரசுக்கு மக்கள் ஆதரவு அதிக அளவில் உள்ளது. இந்தியாவிலேயே சிறந்த மாநில அரசு என்ற பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், திமுக தான் அத்தேர்தலை நடத்தவிடாமல் தடை கோரியது. அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென திமுக வழக்குத் தொடர்ந்தது. தற்போது மீண்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என வழக்குத் தொடர்ந்தது. தற்போது தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறக் கூடாது என்று வழக்குத் தொடர்வது எந்த மாதிரியான நிலைப்பாடு என மக்கள் புரிந்துகொள்வார்கள்.

மக்கள் மீது நம்பிக்கை உள்ள அரசு அதிமுக அரசு. ஆனால், மக்களை நம்பாத கழகம் திமுக. ஆகவேதான் உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு திமுக அஞ்சுகிறது. மக்களை உள்ளாட்சித் தேர்தலில் இருந்து திசை திருப்பவே அவர்கள் பல பிரச்சினைகளைக் கையில் எடுக்கிறார்கள்.

திமுக தோல்வி பயத்தால் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என முயற்சி செய்தது. திமுக கையில் ஆட்சி சென்றால் உள்ளாட்சித் தேர்தல் என்பது நடக்காது. அதற்கு ஏற்கெனவே பல உதாரணங்கள் உள்ளன".

இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x