Published : 30 Dec 2019 07:26 AM
Last Updated : 30 Dec 2019 07:26 AM

தமிழகத்தில் உள்ள 6 கோயில்களில் இ-சேவைகளின் மூலம் ரூ.5 கோடி வசூல்: இந்து சமய அறநிலையத் துறை தகவல்

கோயில்களில் இ-சேவைகளின் மூலம் ரூ.5 கோடி வசூலாகியுள்ளது என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில்கள் முக்கிய கோயில்களாக விளங்குகின்றன.

நீண்ட தூரத்தில் இருக்கும் பக்தர்கள் இக்கோயில்களுக்கு நன்கொடை, அன்னதானம் உள்ளிட்டவற்றுக்கு நேரடியாக வந்துதான் பணத்தை கொடுக்க வேண்டியிருந்தது. எனவே, பக்தர்களின் வசதிக்காக ஆன்லைனில் பணத்தை செலுத்தும் வகையில் இ-சேவையை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இதன் அடிப்படையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில், வடபழனி முருகன்கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், சின்ன காஞ்சிபுரம் தியாகராஜ சுவாமி கோயில் ஆகிய6 கோயில்களில் இ-சேவை வசதிகள் தொடங்கப்பட்டன.

இதைப் பயன்படுத்தி பக்தர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் நன்கொடை, தரிசனம், அன்னதானம், அபிஷேகம், தங்கரதம் உள்ளிட்டவற்றுக்கு தங்களால் முடிந்த நிதியை வழங்கி வருகின்றனர்.

இதன் அடிப்படையில், கடந்த ஓராண்டில் இ-நன்கொடை, அன்னதானம் மற்றும் தரிசனம், அபிஷேகம் உள்ளிட்ட இ-சேவைகளில் ரூ.5 கோடியே 21 லட்சத்து 9 ஆயிரத்து 272 வசூலாகியுள்ளது.

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இ-சேவைகள் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவு ஆர்வத்துடன் நன்கொடை, அன்னதானத்துக்கு பணம் அளித்து வருகின்றனர்.

இதன்படி தங்கரதம், அபிஷேகம், இ-உண்டியல் உட்பட இ-சேவைகளுக்கு ரூ.2 கோடியே 60 லட்சத்து 14 ஆயிரத்து 628, இ-நன்கொடைக்கு ரூ.3 கோடியே 49 லட்சத்து 8 ஆயிரத்து 828, அன்னதானத்துக்கு ரூ.80,016 அளித்துள்ளனர். சின்ன காஞ்சிபுரம் கோயிலுக்கு மட்டும் தரிசனத்துக்கு ரூ. 2 கோடியே 25 லட்சத்து 15 ஆயிரத்து 800 வசூலாகியுள்ளது. மொத்தமாக, ரூ.5 கோடியே 21 லட்சத்து 9 ஆயிரத்து 272 வசூலாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x