Published : 30 Dec 2019 07:22 AM
Last Updated : 30 Dec 2019 07:22 AM

உண்மைக்கு மாறான பிரச்சாரம் மூலம் முதல்வரை வீழ்த்த நினைக்கும் முயற்சி பலிக்காது: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

உண்மைக்கு மாறான பிரச்சாரம் மூலம் முதல்வர் பழனிசாமியை வீழ்த்த நினைக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முயற்சி பலிக்காது என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஆளுமைத் திறனில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதைக் கண்டு பொறாமைத் தீயில்வெந்து கொண்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர்பழனிசாமி மீதும் அதிமுக அரசு மீதும் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி உடைந்துவிடும், அரசு முடிந்துவிடும். அதன்மூலம் முதல்வர் பதவியில் அமர்ந்து தங்கள் குடும்ப ஆட்சியை நடத்தலாம் என்று ஸ்டாலின் கனவுக் கோட்டை கட்டியிருந்தார். ஆனால், அதிமுக அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக திகழ்கிறது. இதை தாங்க முடியாத ஸ்டாலின், முதல்வர் குறித்து உண்மைக்கு மாறான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

சட்டம் - ஒழுங்கு பராமரிப்பிலும், மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்குவதிலும் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதற்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருக்க வேண்டும். இன்னும் சிறப்புடன் மக்கள்பணியாற்ற ஆலோசனை தந்திருக்கலாம். அதைவிடுத்து மத்திய அரசின் ஆய்வை கேலிக்கூத்தாக்கி யுள்ளார். கடந்த 70 ஆண்டுகளாக நிர்வாகத்தில் ஏதேனும் ஒரு வகையில் பங்குபெற்றிருக்கும் அவரது குடும்பம் கற்றுத் தந்த பக்குவம் இதுதானா, தேர்தல் களத்தில் வெற்றியும், தோல்வியும் இயல்பானவை. ஒவ்வொரு தேர்தலிலும் ஸ்டாலின் தனது சொந்ததொகுதியில்தான் போட்டியிடு கிறாரா அல்லது போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றாரா, முதல்வர் தனது சொந்த தொகுதியில் தோல்வி அடைந்ததாக விமர்சிப்பது அவரது அரசியல் பக்குவமின்மையைக் காட்டுகிறது.

இந்திய இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப நடக்கும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அண்டை மாநிலங்கள், மத்திய அரசுடன் இயன்றஅளவுக்கு இணக்கமாக இருந்து திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில்தான் அதிமுக அரசு செயல்படுகிறது.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறைநடத்தப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு பணிகள்தான் தற்போது நடக்க உள்ளது. இது தேசிய குடியுரிமை பதிவேடு அல்ல என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட ஸ்டாலின் முயற்சிக்கிறார். 2009-ல் மத்திய அரசில் அங்கம் வகித்தும் ஈழத் தமிழர்களை காப்பாற்றத் தவறிய திமுகவுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துபேச எவ்வித தார்மீக உரிமையும் இல்லை.

சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டாமல், அவர்களின் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற குறுகிய சிந்தனைக்குள் அடைபட்டுள்ள ஸ்டாலின், தமிழகத்தை போராட்டக்களமாக்க முயன்றால் தோல்விதான் கிடைக்கும். உண்மைக்கு மாறான பிரச்சாரம் மூலம் முதல்வர் பழனிசாமியை வீழ்த்த ஸ்டாலின் முயற்சித்தால் அது பயனளிக்காது. தனது உழைப்பு, பணிவு, பண்பால் முதல்வர் என்றும் ஓங்கிதான் நிற்பார். மக்கள் செல்வாக்கை பெறுவார். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x