Published : 30 Dec 2019 07:02 AM
Last Updated : 30 Dec 2019 07:02 AM

இசை உலகில் தனக்கென ஓர் இடம் பிடிப்பார் சுஷ்மா

சென்னை

கே.சுந்தரராமன்

தணிக்கையாளராக இருந்து கொண்டு இசைத் துறையில் வேகமாக முன்னேறி வருபவர் சிங்கப்பூரைச் சேர்ந்த சுஷ்மா சோமசேகரன். சிறு வயது முதலே கர்னாடக இசை (வாய்ப்பாட்டு, வயலின்) பயின்று வரும் இவர், லலிதா சிவகுமாரிடம் தற்போது இசை பயின்று வருகிறார்.

மியூசிக் அகாடமி, பார்த்தசாரதி சுவாமி சபா, சிங்கப்பூர் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி உள்ளிட்ட சபாக்களில் இளம் கலைஞருக்கான விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடு களிலும் பல இன்னிசை கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார்.

தற்போது சென்னை மார்கழி இசைவிழாவில் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், மியூசிக் அகாடமி, ஆர்.ஆர். சபா, மதுரத்வனி, தியாக பிரம்ம கான சபா உள்ளிட்ட பல சபாக்களில் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

சென்னை மியூசிக் அகாடமியில் சமீபத்தில் இவரது குரலிசைக் கச்சேரி நடைபெற்றது. ‘பாஹி கிரிராஜ சுதே கருணா கலிதே’ என்ற ஆனந்த பைரவி ராகத்தில் அமைந்த சியாமா சாஸ்திரி சாஹித்யத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. ‘ஓ அம்பா, இமயமலை ராஜனின் மகளே, என்னைக் காப்பாயாக. உனது தாமரை பாதங்களைப் பணிகிறேன்’ என்று காமாட்சியை வணங்கிய பின்னர், வராளி ராக ஆலாபனையைத் தொடர்கிறார். முத்துஸ்வாமி தீட்சிதரின் ‘மாமவ மீனாட்சி’ க்ருதியை மனம் உவந்து பாடினார்.

‘ஷ்யாமே சங்கரி திக்விஜய ப்ரதாபினி’ என்ற சரண வரியில் நிரவல் செய்து பின்னர், ஸ்வரக் கோர்வைகளுடன் அப்பாடலை நிறைவு செய்தார். அடுத்து துரித கதியில் பாபநாசம் சிவனின் யதுகுல காம்போஜி பாடலான ‘குமரன்தாள் பணிந்தே துதி’ என்ற பாடலைப் பாடினார். நிழல் போல சுஷ்மாவின் பாடலைப் பின்தொடர்ந்த வயலின் இசைக் கலைஞர் வி.தீபிகா சிறந்த கலைஞராக முத்திரை பதிப்பார் என்பது நிச்சயம்.

கச்சேரியின் பிரதான ராகம்கரஹரப்ரியா. நல்ல விஸ்தாரமான ஆலாபனைக்குப் பின் தியாகராஜரின் ‘சக்கனிராஜ மார்க்கமு’ கீர்த்தனையை அழகுற பாடினார். இக்கீர்த்தனையில் தியாகராஜர், “ஓ மனஸா…. நல்ல மார்க்கம் இருக்கும்போது ஏன் என்னை வேறு பாதைகளில் செல்ல அனுமதிக்கிறாய்’ என்று வேண்டுகிறார். ஆலாபனையில் சில அபூர்வமான பிடிகளைக் கையாண்டார் சுஷ்மா.

‘சக்கனிராஜ மார்க்கமு’ என்ற வரியில் அமைந்துள்ள அனைத்து சங்கதிகளையும் பாடி, ராக பாவத்தை நிலை நிறுத்தினார். காலப்பிரமாணமும் சிறப்புற இருந்தது. ‘கண்டிகி சுந்தர தரமகு ரூபமே’ என்ற வரியில் நிரவல் செய்து, ஸ்வரக் கோர்வைகள் சேர்த்து அழகாக பாடியதும் தனி ஆவர்த்தனத்துடன் (சாய் சங்கர் – மிருதங்கம்) கீர்த்தனை நிறைவுற்றது. மிருதங்கத்தின் பெயருக்கேற்றவாறு சௌக்கியமாக வாசித்தார் சாய் சங்கர்.

அடுத்ததாக சிவபெருமானே சேக்கிழாருக்கு அடியெடுத்து கொடுத்த பெரிய புராண தொடக்க செய்யுளான ‘உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ என்ற விருத்தத்தை சஹானா, காபி,சிந்து பைரவி, பெஹாக் ராகங்களில் இசைத்து, ‘இது தானோ தில்லை ஸ்தலம்’ என்ற கோபால கிருஷ்ண பாரதியின் பெஹாக் ராகப் பாடலுடன் கச்சேரியை நிறைவு செய்தார் சுஷ்மா.

பக்க வாத்திய கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை சிறப்புறச் செய்தனர். இசை உலகில் சுஷ்மா சோமசேகரன் தனக்கென ஓர் இடத்தைப் பிடிப்பார் என்பது உறுதி. கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x