Published : 29 Dec 2019 10:46 AM
Last Updated : 29 Dec 2019 10:46 AM

நெல்லை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான மானூர் பெரியகுளம் 3 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது: 4,000 ஏக்கரில் நெல் விவசாயத்துக்கு வாய்ப்பு

திருநெல்வேலி அருகே மானூரில் நிரம்பி வழியும் பெரியகுளத்தில் மலர் தூவும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ். படம் அ. ஷேக்முகைதீன்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரமான மானூர் பெரியகுளம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழிகிறது. இதனால் 4,000 ஏக்கரில் நெல் விவசாயம் செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த குளத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேற்று பார்வையிட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றான மானூர் பெரியகுளம் 1,120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஓர் அணைக்கட்டுக்கு சமமானது. 180 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இந்த குளம் மூலம் மானூர், மாவடி, மதவக்குறிச்சி, எட்டான்குளம் ஆகிய4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 30 கிராமங்களில் 4,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த குளம் நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, சுற்றியுள்ள 30 கிராமங்களில் விவசாயம் செழிக்கும். மானூர் குளத்துக்கு முன்பாக உள்ள 19 குளங்கள் நிரம்பிய பின்னரே தண்ணீர் மானூர் பெரியகுளத்துக்கு வரும். ஆனால், அதற்குள் பருவமழை முடிந்து விடுவதும் உண்டு.

கடந்த 2006, 2011, 2015 -ம் ஆண்டுகளில் இந்த குளம் நிரம்பியது. குளம் நிரம்பும்போதெல்லாம் இப்பகுதி விவசாயிகள் பிசானம், முன்கார் ஆகிய இருபருவ சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்வர். மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்குமுன் நீடித்த மழையால் தற்போது இந்த குளம் மீண்டும் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் மகிழ்ச்சிடைந்த விவசாயிகள் பிசான சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

குற்றாலத்திலிருந்து தண்ணீர்

சிற்றாறு பாசனத்துக்கு உட்பட்ட இந்த குளத்துக்கு 33 கி.மீ. தூரமுள்ள சிற்றாறு கால்வாய் மூலம் குற்றாலம் பகுதியிலிருந்து தண்ணீர் வருகிறது. இந்த கால்வாயில் பல்வேறு இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டதால் ஆங்காங்கே மணல் மேடாகி காணப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு இப்பகுதி விவசாயிகள் இவ்வாண்டு தொடக்கத்திலேயே கொண்டு வந்தனர்.

இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மையமும், தன்னார்வ அமைப்புகளும் இணைந்து குளத்துக்கு நீர்வரும் கால்வாயை தூர்வாரி செப்பனிடும் பணிகளை கடந்த மே மாதத்தில் செயல்படுத்தினர்.

குற்றாலம் பகுதியிலிருந்து சிற்றாறு கால்வாய் 33 கி.மீ. தூரத்துக்கு தூர்வாரப்பட்டதால் சமீபத்திய பருவமழையின்போது தண்ணீர் தங்குதடையின்றி குளத்துக்கு வந்துசேர்ந்தது. இதனால் குளம் தற்போது நிரம்பி வழிகிறது.

தண்ணீர் வரும் கால்வாய் ஆக்கிரமிப்புகளாலும், மராமத்து செய்யப்படாமல் இருந்ததாலும் 2011-ம் ஆண்டுக்கு பிறகு குளம் வறண்டு கிடந்தது. அண்ணா பல்கலைக்கழக திருநெல்வேலி மண்டல மைய புல முதல்வராக அப்போது பொறுப்பு வகித்த ஜி.சக்திநாதன் முயற்சியில் கால்வாய் பகுதி தூர்வாரப்பட்டதை அடுத்து கடந்த 2015-ம் ஆண்டில் குளத்துக்கு தண்ணீர் தங்கு தடையின்றி வந்து சேர்ந்தது.

ஆட்சியர் மகிழ்ச்சி

அதன் பின்னர் குளம் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் வரவில்லை. மீண்டும் இவ்வாண்டும் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டதால் தற்போது நிரம்பி வழிகிறது. இதனால் 4 ஆயிரம் ஏக்கருக்குமேல் பாசனவசதி பெறும் என்று என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

மானூர் பெரிய குளத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சக்தி நாதன் மற்றும் அதிகாரிகள் நேற்றுபார்வையிட்டனர். குளத்தில் பூக்களை தூவி ஆட்சியர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருக்கு விவசாயிகள் நன்றி கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x