Last Updated : 28 Dec, 2019 05:17 PM

 

Published : 28 Dec 2019 05:17 PM
Last Updated : 28 Dec 2019 05:17 PM

பிரச்சார செலவில் பாக்கி வைத்துள்ள வேட்பாளர்களால் தேனி வியாபாரிகள் கலக்கம்

தேனி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல வேட்பாளர்கள் ஆட்டோ, மைக்செட், உணவகம், டீக்கடை என்று பல ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். இப்பணம் தங்களுக்கு கிடைக்குமா அல்லது இழக்க நேரிடுமா என்று சிறு வணிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 27ம் தேதி ஆண்டிபட்டி, க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் நடந்து முடிந்துள்ளது. வரும் 30ம் தேதி மீதம் உள்ள 6ஒன்றியங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் இன்று முடிவடைந்துள்ளது.

தேர்தலில் பிரசாரத்திற்கான அதீத செலவினம் என்பது சுயேட்சை முதல் கட்சி வேட்பாளர்கள் வரை தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. ஆதரவாளர்களை திரட்டி ஒவ்வொரு பகுதிக்கும் செல்வதற்கான கூலி, அவர்களுக்கு சாப்பாடு, டீ , மது உள்ளிட்டவற்றையும் வாங்கித் தர வேண்டிய நிலை உள்ளது.

கடமலைக்குண்டு, கண்டமனூர், மயிலாடும்பாறை ஒன்றியங்களில் பிரச்சாரம் செய்வதற்காக அழைத்துச் சென்றவர்களுக்கு ரூ.250வழங்கப்பட்டது.

ஆட்டோ வாடகையாக மட்டும் ஒரு நாளைக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. பெட்ரோல், டிரைவர்களுக்கு சாப்பாடு உள்ளிட்ட செலவினம் தனி. இதே போல் இரண்டு குழாய் ஸ்பீக்கர்கள், ஆம்பிளிபயர், ஒரு வேலையாள் ஆகியவற்றிற்கு ரூ.1500, 2000 வாட்ஸ் ஜெனரேட்டர் ரூ.500, பெரியரக ஆட்டோவிற்கு ரூ.2000 என்று கிராமங்களில் சிறு வணிகம் களைகட்டியது.

இதுதவிர வாக்காளர்களுக்கான பணம், துண்டுபிரசுரங்கள், போஸ்டர் என்று தேர்தலுக்கான பணப்புழக்கம் அதிகமாகவே இருந்தது.

தோல்வி அடையும் போது பொருளாதார ரீதியாக வளமாக உள்ளவர்கள் தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் தேர்தல் செலவுகளால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது தேனி மாவட்டத்தில் பல வேட்பாளர்கள் பிரசார செலவுகளுக்கான தொகையை முழுதாக தராமல் உள்ளனர். கூட்டமாகச் சென்று ஓட்டல்களில் சாப்பிட்டது, டீ கடைகள், ஆட்டோக்கள், மைக்செட்டுகள் என்று செய்த செலவுகளுக்கான பணத்தை முழுதாக தராமல் பாக்கி வைத்துள்ளனர்.

ஓட்டுஎண்ணிக்கை வரை பரபரப்பாக இருப்பதால் சற்று பொறுத்திருக்கும்படி வேட்பாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

இது வியாபாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கண்டமனூரைச் சேர்ந்த மைக்செட் உரிமையாளர் கணேசன் கூறுகையில், தேர்தல் நேரத்தில் அதிக ஆர்டர்கள் கிடைத்தது. ஆனால் வேட்பாளர்கள் எங்களுக்கு தர வேண்டிய பணத்தை முழுதாக தரவில்லை. பாக்கியை விரைவில் செட்டில் செய்வதாகக் கூறுகிறார்கள். தோற்றுவிட்டால் கடனாகிவிட்டது, சற்று பொறுத்திருங்கள் என்று கூறி ஏமாற்றி விடுவார்கள். தற்போது மீதப் பணம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x