Published : 18 Aug 2015 10:24 AM
Last Updated : 18 Aug 2015 10:24 AM

கூடுவாஞ்சேரி திருவள்ளூருக்கு நேரடி பஸ் இயக்க வேண்டும் - உங்கள் குரல்: வாசகர்களின் புகார்கள்

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட புகார்கள்:

கூடுவாஞ்சேரி திருவள்ளூருக்கு நேரடி பஸ் இயக்க வேண்டும்

சென்னை, கூடுவாஞ்சேரியில் இருந்து திருவள் ளூருக்கு நேரடி யாக அரசு பஸ் களை இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் வாசகர் கே.என்.ஜி.விநாயகம் கூறியிருப்பதாவது:

சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து லட்சக்கணக் கான மக்கள் சென்னையின் பல்வேறு இடங்களில் வேலைக்காக சென்று வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தடம் எண் 600 கொண்ட பஸ் திருவள்ளூரில் இருந்து செங்கல்பட்டுக்கு இயக்கப்பட்டது.

ஆனால், போக்குவரத்துக் கழகங்கள் இடையே எல்லை பிரச்சினை காரணமாக அந்த பஸ் நிறுத்தப் பட்டதாக கூறப்படுகிறது. எனவே, மாநகர போக்கு வரத்துக் கழகம் சார்பில் கூடுவாஞ்சேரியில் இருந்து சிங்கப்பெருமாள்கோயில், பெரும்புதூர் வழியாக திருவள்ளூருக்கு நேரடி பஸ்களை இயக்க வேண்டும். அல்லது செங்கல்பட்டில் இருந்து திருவள்ளூருக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக விழுப்புரம் போக்குவரத்துக் கழக அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘பொதுமக்களின் கோரிக்கை குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும். பின்னர், அந்த வழித்தடம் குறித்து ஆய்வு செய்யப்படும். தேவை இருந்தால், அந்த வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படும்’’ என்றார்.

***

இ-சேவை மையத்தில் சான்றிதழ்கள் வழங்குவது தாமதம்

காஞ்சிபுரம், வில்லியம்பாக்கம் கிராமத்தில் உள்ள இ-சேவை மையத்தில், சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக ‘தி இந்து’வின் உங்கள் குரல் சேவையில் புகார் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங் கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட் பட்டது வில்லியம்பாக்கம் ஊராட்சி. இங்கு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இ-சேவை மையம் ஒன்று, பஸ் நிறுத்தம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதில், வில்லியம்பாக்கம், தேவனூர், திம்மாவரம் உள்பட 10-க் கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளைச் சேர்ந்தோர் சாதி மற்றும் வருமா னம் போன்ற பல்வேறு சான்றிதழ் களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இ-சேவை மையம் கடந்த 5 நாட்களாக பூட்டிய நிலையிலேயே இருப்பதால், மேற் கூறிய சான்றிதழ்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ‘தி இந்து’ வின் உங்கள் குரலில் அப்பகுதி கிராம வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, திம்மாவரத்தை சேர்ந்த ராமன் கூறியதாவது:

‘‘வில்லியம்பாக்கத்தின் இ-சேவை மையத்தின் வெளி கதவுகளை மட்டும் திறந்துவைத்துவிட்டு, அறை யின் கதவுகளை பூட்டி விடுகின்றனர். இதனால், இ-சேவை மையம் திறந்திருப்பதாக நம்பி செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது. மேலும், மையத்தில் பணிபுரியும் பணியாளரிடம் சான்றி தழ்கள் குறித்து தகவல் கேட்டால், ‘இ-சேவை மையத்தை கூடுதலாக கவனித்து வருகிறேன். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்தான் எனது முதன்மை பணி. அங்குள்ள பணிகளை முடித்த பின்னர்தான், கூடுதல் பணிகளை கவனிக்க முடியும்’ என கூறுகின்றார்’’ என்றார் ராமன்.

இதுகுறித்து, வில்லியம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலர் ஞானசேகர னிடம் கேட்டபோது, ‘‘இ-சேவை மையத்தில் உள்ள கணினியில் பிஎஸ் என்எல் இணையதள சேவையின் மென்பொருள், கடந்த சில தினங் களுக்கு முன்பு பழுதடைந்தது. இதை சீரமைத்து தருமாறு அலுவலகத்துக்கு தெரிவித்திருந்தோம். இதன் காரண மாக சான்றிதழ்கள் வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. தற்போது பழுது சரிசெய்யப்பட்டுள்ளது. இ-சேவை மையத்தின் பணியாளர் மீதான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

***

பாலிசி பிரீமியத்தை சரியாக ஏஜென்ட்டுகள் கட்டுவதில்லை

சென்னை, காப்பீட்டு நிறுவனங்களின் ஏஜென்ட்டுகள் வசூலிக்கும் பிரீமியம் தொகையை சம்மந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களில் சரியாக கட்டுவதில்லை’ என பெரம்பூரைச் சேர்ந்த லியோன் டிராட்ஸ்கி என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரலில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.

நான் பொதுத்துறை மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் பல்வேறு வகையான பாலிசிகளை எடுத்துள்ளேன். இவை அனைத்தும் ஏஜென்ட்டுகள் மூலம் வாங்கினேன். இதற்காக, காலாண்டு, அரையாண்டு என்ற காலவரையறையில் அதற்கான பிரீமியம் கட்டி வருகிறேன். ஏஜென்ட்டுகள் என்னிடம் ஒரு வருடத் துக்குத் தேவையான பிரீமியத் தொகையை மொத்தமாக வசூலித்து செல் கின்றனர். ஆனால், அப்பணத்தை ஏஜென்ட் டுகள் முறையாக கட்டுவதில்லை.

இதுகுறித்து, காப்பீட்டு நிறுவனங்களிடம் புகார் செய்தும் நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை.

இவ்வாறு லியோன் டிராட்ஸ்கி கூறினார்.

இதுகுறித்து, காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஏஜென்ட்டுகள் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வருகின்றன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்யும் ஏஜென்ட்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x