Published : 28 Dec 2019 01:44 PM
Last Updated : 28 Dec 2019 01:44 PM

வாகனத்தை பெயர் மாற்றாமல் விற்றால் வில்லங்கம்!

க.சக்திவேல்

சந்தையில் புதுப்புது வாகனங்கள் அறிமுகமாகிவரும் அதேவேளையில், பழைய கார், இருசக்கர வாகனங்களை வாங்குவதும், விற்பதும் அதிகரித்து வருகிறது.

பயன்படுத்திய வாகனத்தை விற்கும்போது, வாங்குபவரின் பெயருக்கு வாகனப் பதிவுச்சான்றில் (ஆர்.சி.) பெயர் மாற்றம் செய்யாமல் விற்றால், வாகனத்தை வாங்கியவர் விபத்தை ஏற்படுத்தினால் வாகனப் பதிவுச் சான்றில் யார் பெயர் உள்ளதோ அவரே பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்கின்றனர் போலீஸாரும், போக்குவரத்துத்துறையினரும்.
போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறும்போது, “பெயர் மாற்றாமல் விற்கப்படும் வாகனம், பலரது கைக்குமாறி குற்றச்செயலுக்குக்கூட பயன்படுத்தப்படலாம். இதனால் வரும் பிரச்சினைகளை விற்றவரே முதலில் எதிர்கொள்ள வேண்டும். விபத்து நடைபெற்றால், முந்தைய உரிமையாளரே இழப்பீட்டை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே, ஒருவர் பயன்படுத்திய வாகனத்தை மற்றவரிடம் விற்கும்போது, விற்றது, வாங்கியதற்கான உரிமையை சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் (ஆர்டிஓ) இருந்து பெற வேண்டியது அவசியம். அவ்வாறு பெயர்ப்பதிவை மாற்றம் செய்த பின்பே வாகனத்தை
யும், ஆவணங்களையும் வாங்குபவருக்கு ஒப்படைப்பது நல்லது. போக்குவரத்து வாகனமாக இருந்தால் பர்மிட்டிலும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பம்

பழைய வாகனத்தை விற்பவர், https://vahan.parivahan.gov.in/vahanservice/vahan/ui/statevalidation/homepage.xhtml என்ற இணையதளத்தில், விற்கும் வாகன எண்ணை பதிவிட்டு Proceed செய்த பிறகு, Online Services என்பதன் கீழ் வரும் Misc (TO/CoA/HPA/HPC/HPT/DupRC) என்பதை ‘கிளிக்’ செய்ய வேண்டும். அதில், வாகன சேசிஸ் எண், செல்போன் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பதிவிடும் செல்போன் எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு (ஓடிபி) அனுப்பப்படும். அதைப் பதிவிட்டால், வாகன பெயர்மாற்றத்துக்காக (Transfer of Ownership) விண்ணப்பம் வரும். அதில் வாகனத்தை வாங்க உள்ளவரின் விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனிலேயே பெயர் மாற்றுத்துக்கான கட்டணத்தை செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.

பின்னர், அந்த ரசீதுடன், அசல் வாகனப் பதிவுச் சான்று (ஆர்.சி.), நடப்பில் உள்ள காப்பீட்டுச் சான்று, வாகன புகை
பரிசோதனை சான்று, முகவரிச் சான்று, படிவம் 29, படிவம் 30, படிவம் 60-ஐ (இருசக்கர வாகனம் தவிர்த்த பிற வாகனங்களுக்கு) சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, உரிமையாளர் பெயரை மாற்றி, ஸ்மார்ட் கார்டு வடிவிலான வாகனப் பதிவுச் சான்று வழங்கப்படும். ஒரே நாளில் இந்த நடைமுறை முடிந்துவிடும்.

காப்பீட்டிலும் மாற்றம் அவசியம்

வாகனப் பதிவு சான்றில் பெயர் மாற்றம் செய்வதோடு காப்பீட்டிலும் பெயர் மாற்றம் செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்
யாமல் விபத்து ஏற்பட்டால், விபத்து காப்பீடு பெற முடியாது. எனவே, 14 நாட்களுக்குள் காப்பீட்டையும் வாங்கியவர் பெயருக்கு மாற்றம் செய்வது அவசியமாகும்” என்றனர்.

‘செகண்ட் ஹேண்ட்’ வாகனங்களை வாங்கியபிறகு பலர் பெயர் மாற்றாமல் இருப்பதற்கு எதிர்கால சந்தை மதிப்பும் முக்கிய காரணம் என்கிறார் கோவை மாவட்ட கார் வியாபாரிகள் நலச் சங்கத்தின் (சிசிடிஏ) பொதுச் செயலாளர் என்.கண்ணன்.
அவர் கூறும்போது, “செகண்ட் ஹேண்ட் வாகனத்தைப் பொறுத்தவரை அதன் கண்டிஷனை பரிசோதித்து பார்த்து வாங்க வேண்டும். உரிமையாளர் எத்தனைபேர் என்பது இரண்டாம்பட்சம்தான். ஆனால், நிலைமை இங்கு தலைகீழாக உள்ளது. செகண்ட் ஹேண்ட் வாகனத்தை வாங்க விரும்பும் பலர், ஒரு உரிமையாளர் வைத்திருந்த வாகனம் தான் வேண்டும் என்று கேட்கின்றனர்.

சந்தை மதிப்பு காரணம்

2,3 பேர் வைத்திருந்த வாகனம், நல்ல நிலையில் இருந்தாலும் அந்த வாகனத்துக்கான சந்தை மதிப்பு குறைக்கப்பட்டு விடுகிறது. இதன்காரணமாக, சிலர் செகண்ட் ஹேண்ட் வாகனத்தை வாங்கி, சில காலம் அதை பயன்படுத்திவிட்டு, தங்களுக்கு ஏற்றது என கருதினால் வைத்துக் கொள்கின்றனர். இல்லையெனில் விற்றுவிடுகின்றனர். அப்படி விற்கும்போது சந்தை மதிப்பு குறையக்கூடாது என்பதால், முதல் உரிமையாளர் பெயரிலேயே வைத்திருக்கின்றனர். பெயர் மாற்றம் செய்து கொள்வதில்லை. பெயர் மாற்றம் செய்யாத இந்தக் காலத்தில் வாகனத்தால் ஏதேனும் விபத்து, குற்றச் செயல்கள் நேர்ந்தால், முந்தைய உரிமையாளர் மட்டுமல்லாமல், விற்பனையாளராகிய நாங்களும் கேள்விக்குள்ளாக்கப்படுவோம். எனவே, எங்கள் சங்க உறுப்பினர்களிடம், கட்டாயம் பெயர் மாற்றம் செய்தே வாகனங்களைவிற்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்”என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x