

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆவடியில் ஏற்காடு விரைவு ரயிலுக்கு வழங்கப்பட்டு வந்த நிறுத்தம் திடீரென ரத்து செய்யப் பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, இந்த ரயிலுக்கு மீண்டும் நிறுத்தம் வழங்கப்பட வேண்டும் என அவர் கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை சென்ட்ரல், ஈரோடு இடையே இயக்கப்படும் ஏற்காடு விரைவு ரயில் (வண்டி எண். 22650), ஆவடியில் நின்று சென்று கொண்டிருந்தது. கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக ஆவடியில் வழங்கப்பட்டிருந்த நிறுத்தம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
இதுகுறித்து, ஆவடியைச் சேர்ந்த ரயில் பயணி ஆர்.பொய் யாமொழி கூறியதாவது:
முன்பு ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் பால் கொண்டு வரப்பட்டது. இதற் காக, ஏற்காடு விரைவு ரயிலில் 2 டேங்கர்கள் இணைக்கப்பட்டிருக் கும். ஆவடி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு இந்த டேங்கர் களில் இருந்து பால் கொரட்டூரில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு கொண்டு செல்லப்படும்.
ஆனால், கடந்த சில ஆண்டு களாக ஏற்காடு விரைவு ரயில் மூலம் பால் கொண்டு வரப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. எனினும், அந்த ரயில் ஆவடியில் நின்று சென்றது. அதிகாலை 3 மணிக்கு ரயில் வருவதால் ஆவடியில் இறங்கி கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி மற்றும் செங்குன்றம் செல்லும் பயணிகளுக்கு மிகவும் சுலபமாக இருந்தது ஆனால், திடீரென இந்த நிறுத்தம் அண்மை யில் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரி களிடம் கேட்டபோது, இந்த ரயில் அதிவிரைவு (சூப்பர் பாஸ்ட்) ரயிலாக மாற்றப்பட்டதால் ஆவடி யில் வழங்கப்பட் டிருந்த நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
தற்போது ஆவடியில் திரு வனந்தபுரம், ஆலப்புழை ஆகிய அதிவிரைவு ரயில்கள் நின்று செல்கின்றன. இந்த இரு அதி விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ஏற்காடு ரயிலுக்கு வழங்கப்பட்டு வந்த நிறுத்தம் மட்டும் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, பயணிகளின் நலன் கருதி ரயில்வே அதிகாரிகள் மீண்டும் ஏற்காடு விரைவு ரயிலுக்கு ஆவடியில் நிறுத்தம் வழங்க வேண்டும்.
இவ்வாறு பொய்யாமொழி கூறினார்.