சென்னையில் 80 மையங்களில் சிவில் சர்வீஸ் தேர்வு: 32 ஆயிரம் பேர் எழுதினர்

சென்னையில் 80 மையங்களில் சிவில் சர்வீஸ் தேர்வு: 32 ஆயிரம் பேர் எழுதினர்
Updated on
1 min read

சென்னையில் 80 மையங்களில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுகளை 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீஸ் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி முதல் நிலை தேர்வுகள் நேற்று நடைபெற்றன. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வை எழுதலாம்.

இந்த தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்றன. 2015-ம் ஆண்டுக்கான முதல் நிலை தேர்வு நேற்று நாடெங்கும் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியானது. இந்தியாவில் உள்ள 1,129 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 29 இடங்கள் மாற்று திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை எழுத சுமார் 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்தியா முழுவதும் 71 நகரங்களிலும் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களிலும் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

சென்னையில் 80 மையங்களில் நடைபெற்ற தேர்வை 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள். இந்த தேர்வில் இரு பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியும் இரண்டு மணி நேரம் நடைபெறும், 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

முதல் பகுதியான பொது அறிவு பகுதியில் பெறப்படும் மதிப்பெண்கள் மெயின் தேர்வு எழுதுவதற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இரண்டாம் பகுதியான சி-சாட் எனப்படும் அறிவுத் திறன் பகுதியில் குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். இதில் பெறப்படும் மதிப்பெண்கள் மெயின் தேர்வு எழுத கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in