Published : 28 Dec 2019 10:30 AM
Last Updated : 28 Dec 2019 10:30 AM

ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் அரசியல் பேச்சு; பதவிக்காக எதிர்க்கட்சிகளைச் சாடுகிறாரோ? - திருமாவளவன் கண்டனம்

மரபுகளை மீறி அரசியல் பேசிய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் மீது அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் இன்று (டிச.28) வெளியிட்ட அறிக்கையில், "இந்திய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் அரசியல் ரீதியான கருத்துக்களை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ராணுவத் தளபதி பிபின் ராவத் அந்நிகழ்ச்சியில் "மக்களை வழிநடத்துபவரே தலைவர். நீங்கள் முன்னோக்கி நடந்தால் மக்களும் உங்களைப் பின்தொடர்வார்கள். ஆனால், அப்படி வழிநடத்தும் தலைவர்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும். மக்களைத் தவறாக வழிநடத்துபவர்கள் சிறந்த தலைவர்களாக இருக்கவே முடியாது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களைத் தவறாக வழிநடத்தியதால் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துகிறார்கள். இது நல்ல தலைமை அல்ல" எனப் பேசியுள்ளார்.

இந்தியாவில் இதுவரையில் இப்படி எந்த ராணுவத் தளபதிகளும் அரசியல் பேசியதில்லை. தற்போது ராணுவத் தளபதி பிபின் ராவத் வெளிப்படையாக அரசியல் பேசியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது. ராணுவத் துறையில் அரசியல் தலையீடு இருக்குமோ என்னும் ஐயத்தை எழுப்புகிறது. அத்துடன், இனிவருங்காலங்களில் அரசியலிலும் அரசிலும் ராணுவத்தின் தலையீடும் இருக்குமோ என்கிற அச்சத்தையும் உண்டாக்குகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவையில் தீர்மானித்தபடி புதிதாக உருவாக்கப்பட்ட முப்படைகளுக்குமான தலைமை தளபதி பொறுப்பில் பிபின் ராவத் நியமிக்கப்படலாம் என்ற செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், அவரது பேச்சு பதவிக்காக எதிர்க்கட்சிகளைச் சாடுகிறாரோ என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜனநாயகத்தின் அடிப்படையில் நடைபெற்ற மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் உயர் அதிகாரியான ராணுவத் தலைமை தளபதி பேசி அரசியலில் தலையிட்டிருப்பது சீருடை பணியாளர்களுக்கான விதிகளையும் மரபுகளையும் மீறும் செயலாகும். ஆகவே, ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் மீது அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x