Published : 27 Dec 2019 09:30 PM
Last Updated : 27 Dec 2019 09:30 PM

பாசமிகு ஆசானை இழந்துவிட்டேன்: நீதிபதி மோகன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

தலைவர் கலைஞரின் உற்ற நண்பரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசருமான எஸ்.மோகன் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதன் முறையாக திமுக ஆட்சி அமைந்த போது, சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு, பிறகு தலைவர் முதல்வரான போது அரசு வழக்கறிஞராகவும், அரசு தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றி திமுக அரசின் பல்வேறு சாதனைச் சட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்.

நீதியரசர் மோகன் சட்ட அறிவு திராவிட இயக்கக் கொள்கைகளை சட்டச் சிக்கல்கள் இன்றி நிறைவேற்றுவதற்கு பேருதவியாக இருந்தது. திமுக ஆட்சியின் போதே சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்று, தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, தமிழகத்தின் பெருமையை டெல்லியிலும் நிலைநாட்டியவர் எஸ்.மோகன்.

அவருடைய நுணுக்கமான சட்ட அறிவின் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழங்கி தமிழர்களின் பெருமையை, திறமையை உச்சாணிக் கொம்பிற்கு கொண்டு சேர்த்தவர். இலக்கிய ஆர்வம் படைத்த அவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட! "சிந்தனை மலர்கள்", "நீதியின் தேரோட்டம்" உள்ளிட்ட பல்வேறு தமிழ் நூல்களையும், "Justice Triumph" உள்ளிட்ட பல ஆங்கில நூல்களையும் எழுதி தன்னிகரில்லாத எழுத்தாளராக விளங்கியவர்.

அவருடைய மறைவு சட்டத்துறைக்கும், தமிழ் மொழிக்கும் பேரிழப்பு என்றாலும், தலைவர் கலைஞரின் உற்ற நண்பர் ஒருவரை - எனக்குத் தலைவர் கலைஞர் விட்டுச்சென்ற உயிருக்கு உயிரான, பாசமிகு ஆசான் ஒருவரை நான் இழந்து தவிக்கிறேன். அவரை இழந்துள்ள இந்தத் தருணத்தில்- என் இதயத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சோகத்துடன் அவரது உறவினர்களுக்கும், அவரை இழந்து வாடும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதியரசர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

*

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x