Published : 27 Dec 2019 07:57 PM
Last Updated : 27 Dec 2019 07:57 PM

என்கவுன்ட்டரைவிட சட்டத்தின் தீர்ப்பே வலிமையானது: கோவை சிறுமி வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் பேட்டி

என்கவுன்ட்டரைவிட சந்தர்ப்ப சாட்சியங்கள் மூலம் குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் வழங்கப்படும் துக்குத்தண்டனையே வலிமையானது, மக்களுக்கு சட்டத்தின்மீது நம்பிக்கையும், குற்றவாளிகளுக்கு பயத்தையும் உருவாக்கும் வல்லமை மிக்கது என கோவை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வாங்கிக்கொடுத்த பெண் வழக்கறிஞர் பதிலளித்துள்ளார்.

கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி கடந்த மார்ச் 25-ம் தேதி மாயமானர். பின்னர் அடுத்த நாளே வீட்டின் பின்புறத்தில் துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.

சிறுமி கொலை நடந்த 6 நாட்களுக்கு பிறகு தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர். வழக்கு கோவையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு போக்சோ சட்டத்தின்படி ஆயுள் தண்டனையும், கொலைக்குற்றத்துக்காக தூக்கு தண்டனையும் அளிப்பதாக மகளிர் நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பளித்தார்.

இந்தவழக்கில் குழந்தை தரப்பில் வாதாடி குற்றவாளிக்கு ஆயுள் மற்றும் தூக்குத்தண்டனை பெற்றுத்தந்த வழக்கறிஞர் சாந்தக்குமாரி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி:

“மிகவும் அரிதாகத்தான் நிர்பயா வழக்குப்போன்ற வழக்குகளில்தான் தூக்குத் தண்டனை அளிக்கப்படுகிறது. கோவை துடியலூர் குற்றவாளிகளுக்கு கிடைத்த தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது மிகப் பாராட்டுதலுக்குரியது. மிகக்கொடிய கொடுமையைச் செய்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பதில் தவறே இல்லை.

எடுத்தவுடனேயே சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கொல்வதைவிட வழக்கு விசாரணை நடந்து நீதிபதிமூலம் தூக்கு தண்டனை கிடைப்பது அனைவருக்கும் சட்டத்தின் மீது நம்பிக்கை ஏற்படும். தெலங்கானாவில் துள்ளதுடிக்கக் கொன்ற நான்குபேருக்கு கொடுக்கப்பட்ட என்கவுன்ட்டரை விட அதிக சக்தி வாய்ந்தது சட்டத்தின்மூலம் வாத பிரதிவாதங்கள் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றம் மூலம் கொடுக்கப்படும் மரணதண்டனைத்தான்.

அது நடந்தால்தான் பொதுமக்களுக்கு சட்டத்தின்மீது நம்பிக்கை வரும், குற்றவாளிகளுக்கும் பயம் வரும். தப்புச் செய்தால் தப்பிக்க முடியாது என்ற எண்ணம் வரும். பாலியல் வன்கொடுமையில் பெண் குழந்தைகள் பாதிக்கப்படும்போது முதலில் பதறி பல பெற்றோர் மறைத்துவிடுகிறார்கள். இதுபோன்று நடந்தவுடன் குழந்தையை சுத்தம் செய்கிறேன் என குளிப்பாட்டுவது, இரண்டு மூன்று நாட்கள் ஆறப்போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போவது என்றெல்லாம் இருக்கக்கூடாது.

தடயங்களை அழிக்கும் எந்தச் செயலையும் பெற்றோர்கள் செய்யாதீர்கள். உடனடியாக போலீஸாருக்கு தகவலைச் சொல்லுங்கள் . இதுபோன்ற பாலியல் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க பெண் குழந்தைகளை தனியாக விடாதீர்கள். உங்கள் கண் பார்வையிலேயே வையுங்கள். 10 வயதுக்கு மேற்பட்ட பென் குழந்தைகளுக்கு கூடியவரை தற்காப்பு மற்றும் தவறான தொடுதல், சரியான தொடுதல் குறித்து சொல்லித்தாருங்கள்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x